உலகக் கோப்பை 2023l சிறப்பாக செயல்பட்ட இந்திய கிரிக்கெட் அணி, தொடக்கம் முதல் அரையிறுதி வரை அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று கெத்து காட்டியது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததால் உலக சாம்பியனாக முடியவில்லை. இருப்பினும், உலகக் கோப்பையில் இந்திய அணியின் இந்த சிறப்பான பயணத்திற்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மிக முக்கிய பங்கு வகித்தனர். ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் இந்திய அணி 12 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
முடிந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம்:
இந்த உலகக் கோப்பையுடன், ராகுல் டிராவிட்டின் பயிற்சிக் காலமும் முடிவடைந்த நிலையில், உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி ராகுல் டிராவிட்டின் பயிற்சிக் காலத்தின் கடைசிப் போட்டியாக அமைந்தது. இதுபோன்ற சூழ்நிலையில், ராகுல் டிராவிட் தொடர்ந்து இந்திய அணிக்கு பயிற்சியளிப்பாரா இல்லையா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் ஊடக அறிக்கைகளின்படி, ராகுல் டிராவிட் இனி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்க விரும்பவில்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ராகுல் டிராவிட் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய கிரிக்கெட் அணியுடன் ஒரு வீரர், கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பயணம் செய்துள்ளார். ஆனால் இப்போது டிராவிட் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புகிறார் என்றும், இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தால் இது சாத்தியமில்லை என்றும் தெரிகிறது. மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக தொடர்ந்தால் சில சமயங்களில் இந்திய அணியுடன் வெளிநாடுகளுக்கு பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலையில், ராகுல் டிராவிட் இப்போது தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட விரும்புவதாகவும், அதனால் இந்திய அணியில் பயிற்சியாளர் பதவியை நீட்டிக்க அவருக்கு விருப்பம் இல்லை என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார்?
இந்நிலையில் ராகுல் டிராவிட் இல்லையென்றால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு தற்போது அதிகாரப்பூர்வ பதில் இல்லை என்றாலும், அறிக்கைகளின்படி, தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவரும், ராகுல் டிராவிட்டின் பழைய நண்பருமான VVS லக்ஷ்மண் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆவதற்கு தனது ஆர்வத்தை காட்டியுள்ளார். லக்ஷ்மன் கடந்த சில ஆண்டுகளாக தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவராக இருந்து வருகிறார். மேலும் ராகுல் டிராவிட் இல்லாத சில நேரங்களில் இந்திய அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். மேலும், இன்று தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு விவிஎஸ் லட்சுமணன் தலைமைப் பயிற்சியாளராக இருந்து வருகிறார். மேலும் அடுத்த மாதம் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்குச் செல்வதற்கு முன், பிசிசிஐ விவிஎஸ் லட்சுமணனை இந்திய அணியின் முழுநேர தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கலாம் என்று தெரியவந்துள்ளது.