நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் ராஸ் டெய்லர். இவர் கடந்த ஏப்ரல் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்திருந்தார். இவர் தன்னுடைய ஓய்வை அறிவித்த பிறகு தற்போது ‘ப்ளாக் அண்ட் ஒயிட்’ என்ற பெயரில் சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்நிலையில் அந்தப் புத்தகத்தில் அவர் நியூசிலாந்து அணியில் இருந்த நிறவெறி சர்ச்சை தொடர்பாக சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதன்படி, “நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் நிறம் தொடர்பான கருத்துகளை நான் அதிகமாக கேட்டிருக்கிறேன். அவை அனைத்தும் ஒரு ஜோக் போல் சொல்லப்படுவது வழக்கமாக இருந்தது. அதை நாம் பெரிது படுத்த முடியாதபடி அமைந்திருக்கும். ஆனால் அவை அனைத்தும் நம்முடைய நிறம் தொடர்பான ஒன்றாக இருந்தது.
இது போன்ற நிறவெறி கருத்துகளை யார் கூறினார் என்று நான் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் இதுபோன்ற சம்பவம் நடந்தது உண்மை. என்னிடம் ஒருவர் வந்து ராஸ் டெய்லர் நீ பாதி நல்ல மனிதர் என்று கூறினார். அதாவது அவர் என்னுடைய நிறத்தை பற்றி அவ்வாறு குறிப்பிட்டார். அது எனக்கு நன்றாக புரிந்தது. என்னுடைய பாலினீசியம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குறைவாக இருந்தனர். இதனால் என்னை சிலர் மையோரி அல்லது இந்தியர் என்று புரிந்து கொண்டனர்.
இந்த மாதிரியான கருத்துகளை சுட்டி காட்டி நாம் பிரச்சினையாக்க நினைத்தால் அது நமக்கு பெரிய சிக்கலாக முடியும் என்று நான் நினைத்தேன். இதன்காரணமாக நான் அதை செய்யவில்லை. ஏன்னென்றால் ஜாலியாக ஒருவர் கூறியதை பிரச்னையாக மாற்றிவிட்டார் என்ற பேச்சு எழும் என்று பயந்தேன். அதற்காக அதை அப்போது பெரிதாக்கவில்லை. எனினும் இது தவறு என்று அதை செய்பவர்கள் உணர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்காக 112 டெஸ்ட் போட்டிகள், 236 ஒருநாள் போட்டிகள் and 102 டி20 போட்டிகளில் ராஸ் டெய்லர் களமிறங்கியுள்ளார். இவற்றில் மொத்தமாக 7683 டெஸ்ட் ரன்களும், 8607 ஒருநாள் ரன்களும் and 1909 டி20 ரன்களையும் அடித்துள்ளார். நியூசிலாந்து அணி சார்பில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் ராஸ் டெய்லர் தன்வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்