இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்பான சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஹர்பஜன் சிங். இவர் இந்திய அணியில் 1998ஆம் ஆண்டு முதல் முறையாக களமிறங்கினார். 23 ஆண்டுகள் தன்னுடைய கிரிக்கெட் பயணத்தில் அவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இன்று ஹர்பஜன் சிங் தன்னுடைய 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்நிலையில் ஹர்பஜன் சிங் படைத்த 3 சிறப்பான ரெக்கார்டுகள் என்னென்ன?
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்தியர்:
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்காக ஹாட்ரிக விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் ஹர்பஜன் சிங் தான். இவர் 2001ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி களமிறங்கியது. அந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய ஹர்பஜன் சிங் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். கில்கிறிஸ்ட், பாண்டிங் மற்றும் வார்ன் ஆகிய மூவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க செய்து இந்த ஹாட்ரிக் சாதனையை படைத்தார்.
400 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய ஆஃப் ஸ்பின்னர்:
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஹர்பஜன் சிங் ஒரு அசைக்க முடியாத பந்துவீச்சாளராக இருந்தார். இவர் 2011ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அப்போது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 400 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய ஆஃப் ஸ்பின்னர் என்ற சாதனையை படைத்தார். அவருக்கு பின்பு ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது 400 விக்கெட்களை கடந்து அசத்தியுள்ளார்.
ஒரு டி20 போட்டியில் 2 மெய்டன் வீசிய முதல் இந்தியர்:
2012ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் ஹர்பஜன் சிங் பங்கேற்றார். அந்தத் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் இவர் இரண்டு மெய்டன் ஓவர்கள் வீசி அசத்தினார். அத்துடன் 12 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் ஒரே டி20 போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள் வீசிய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்திருந்தார். அவருக்கு பின்னர் புவனேஸ்வர் குமார், பும்ரா உள்ளிட்ட வீரர்கள் இந்தச் சாதனைப் படைத்திருந்தனர்.
கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் இந்திய அணியில் விளையாடிய ஹர்பஜன் சிங் 103 டெஸ்ட் போட்டிகள், 236 ஒருநாள் போட்டிகள் மற்றும் 28 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதில் டெஸ்டில் 417 விக்கெட்களையும், ஒருநாள் போட்டியில் 269 விக்கெட்களையும் மற்றும் டி20 போட்டிகளில் 25 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். இவர் கடந்த டிசம்பர் மாதம் தன்னுடைய ஓய்வை அறிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர்கள் வரிசையில் ஹர்பஜன் சிங் நான்காவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் ஓய்விற்கு பின்பு ஹர்பஜன் சிங் தற்போது மாநிலங்களவை எம்பியாக அடுத்த ஆட்டத்தை தொடங்கியுள்ளார். 42வது பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிப்போம்.