இங்கிலாந்திற்கு எதிரான  டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் 35 ரன்கள் விளாசி  ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்துள்ளார் இந்திய அணியின் வீரர் பும்ரா.  அவர் ஸ்டூவர்ட் பிராட்டின் ஒரு ஓவரில் 2 சிக்ஸர், 4 பவுண்ட்ரி மற்றும் எக்ஸ்ட்ராஸ் உட்பட மொத்தம் 35 ரன்களை மைதானம் முழுக்க பறக்க விட்டுள்ளார். இதன் மூலம், இதற்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெடில் ஒரே ஓவரில்  ஜாம்பவான்கள் நிகழ்த்திய அனைத்து தனிநபர் சாதனைகளையும் முறியடித்துள்ளார் பும்ரா. இதனால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் உலக சாதனைக்கான இலக்கு என்பது 35 ரன்கள் என்ற உச்சத்தினை தொட்டுள்ளது.  இதில் ஒரே அணி தொடர்ந்து வதைக்கப்படுவதும் கிரிக்கெட் வட்டாரத்தில் கவனத்தினை பெற்றுள்ளது.   


இதற்கு முன்னர் டெஸ்ட் கிரிகெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்களை அடித்த வீரர்கள்  என்ற உலக சாதனைக்குச் சொந்தக்காரர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் லாரா. அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2002-2003ல் நடைபெற்ற டெஸ்ட் தொடரில், தென் ஆப்பிரிக்க பவுலர் பீட்டர்சனின் ஒரே ஓவரில் 28 ரன்கள் அடித்ததே உலக சாதனையாக இருந்தது. இந்த ஓவரில் லாரா, 4,6,6,4,4,4 என்ற வரிசையில் ஆறு பந்துகளையும் மைதானத்தின் 360 டிகிரிகளிலும் பறக்கவிட்டு சாதனைக்கான மைல் கல்லினை நட்டு வைத்தார்.


அதன் பின்னர் நடந்த போட்டிகளில் லாராவின் சாதனையோடு மற்ற அணி வீரர்கள் இணைந்து கொண்டார்களே தவிர, யாரும் லாராவைக் கடக்கவில்லை. அவ்வகையில் லாராவோடு உலக சாதனையினை பகிர்ந்து கொண்டவர்கள், ஆஸ்திரேலியாவின் ஜார்ஜ் பெய்லி மற்றும் தென் ஆப்பிரிக்காவின் கே.ஏ. மகாராஜ். இதில் ஜார்ஜ் பெய்லி இங்கிலாந்துக்கு எதிராக 2013-2014ல் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஆண்டர்சனின் ஓவரில் 4,6,2,4,6,6 என்ற முறையே 28 ரன்கள் எடுத்து,  இங்கிலாந்து வீரர்களை ஓடவிட்டார். இதற்கடுத்தும் இங்கிலாந்துக்கு எதிராக  2019-2020ல் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்காவின், கே.ஏ. மகாராஜ், பகுதி நேர பந்துவீச்சாளராக பந்து வீசிய ரூட்டின் ஒரு ஓவரில், 4,4,4,6,6b,4 என்ற முறையே 28 ரன்கள் விளாசினார்.


தொடர்ந்து வதைக்கப்படும் இங்கிலாந்து..


இதில் மிகவும் கவனிக்கப்பட வேண்டியது உலக சாதனை நிகழ்த்தப்பட்டது இங்கிலாந்துக்கு எதிராகத் தான் அதிக முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. 35 ரன்கள் விளாசிய பும்ரா, 28 ரன்கள் நொறுக்கிய ஜார்ஜ் பெய்லி மற்றும் கே.ஏ மகாராஜ் ஆகியோர் இங்கிலாந்து வீரர்களை ஓட ஓட விரட்டி அடித்துள்ளனர். இப்படியொரு மோசமான சாதனை ஒரு அணிக்கு எதிராகவே தொடந்து அதிக முறை நிகழ்வது, கிரிக்கெட் வட்டாரத்தில் சுவாரஸ்யமான உரையாடலை ஏற்படுத்தியுள்ளது.  


இப்படியான உலக சாதனையினைப் படைத்த இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவுக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ஜாம்பவான்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண