இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி பிர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் நாள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்திருந்தது. அதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா சதம் விளாசினார். அத்துடன் கேப்டன் பும்ரா பேட்டிங்கில் பிராட் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். இதன்காரணமாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 


 


இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் லீஸ் மற்றும் க்ராளி ஆகிய இருவரும் பும்ரா வேகத்தில் வெளியேறினர். இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. இதனால் சிறிது நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 


 






அதன்பின்னர் மழை நின்ற பின்பு மீண்டும் ஆட்டம் தொடங்கியது. அப்போது இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் திணறினர். குறிப்பாக ஓலி போப் மற்றும் ஜோ ரூட் ஜோடி சற்று திணறி வந்தது. ஓலி போப் 10 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து நிதானமாக ஆடி வந்த ஜோ ரூட் 31 ரன்கள் எடுத்திருந்த போது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 


 


இதன்காரணமாக இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து நைட் வாட்ச்மேனாக ஜாக் லீச் வந்தார். அவர்  ரன் எதுவும் எடுக்காமல் முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2ஆம் நாள் ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் மட்டும் எடுத்து திணறி வருகிறது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட 332 ரன்கள் இங்கிலாந்து பின் தங்கியுள்ளது. மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் விரைவாக இங்கிலாந்து விக்கெட்களை எடுக்கும் பட்சத்தில் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையை எட்ட முடியும். ஆகவே இன்றைய மூன்றாவது நாள் ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண