இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் மற்றொரு அணியும் இணைந்து ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதி பெறும் ஒரு அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பி பிரிவில் இடம்பெற்றுள்ளன. ஆகஸ்ட் மாதம் 27ம் ம் தேதி தொடங்கவுள்ள இந்தப் போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 


மேற்கண்ட அனைத்து 5 நாடுகளும் ஏற்கனவே ஆசிய கோப்பையில் தகுதி பெற்றதால், ஏ பிரிவில் மீதமுள்ள ஒரு இடத்திற்கு 4 நாடுகள் போட்டியிட இருக்கின்றனர்.


இந்த நிலையில், ஆசிய கோப்பை 2022 தகுதிச் சுற்றுப் போட்டிகளை நடத்த ஓமன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தகுதிச்சுற்று வருகிற ஆகஸ்ட் 20 முதல் தொடங்கி 5 நாள் நடைபெற இருக்கிறது. 


இந்த தகுதி சுற்று போட்டிகள் அனைத்து ஓமன் அல் அமெரட்டில் உள்ள அல் அமெரத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. தகுதி சுற்றில் ஹாங்காங், சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிர்ட்ஸ் (யுஏஇ), குவைத் ஆகிய நான்கு அணிகள் விளையாடுகின்றன.






ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடக்கும் முதல் போட்டியில் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. தகுதிச் சுற்றின் கடைசி போட்டி ஆகஸ்ட் 24 ஆம் தேதி ஹாங்காங் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே நடைபெற உள்ளது. இந்த நான்கு அணிகளும் ரவுண்ட்-ராபின் என்ற முறையில் ஒருவரையொருவர் எதிர்கொண்டு, பட்டியலில் முதலிடம் வரும் அணி UAE இல் ஆகஸ்ட் 27 முதல் தொடங்கும் ஆசிய கோப்பை 2022 தொடருக்கு தகுதி பெறுவர். தகுதி சுற்றில் டேபிள்-டாப்பராக வரும் அணி ஆசிய கோப்பையில் ஆறாவது அணியாக இடம் பிடித்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் குரூப் ‘ஏ’ பிரிவில் இணையும். ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று அணிகள் ஏற்கனவே களம் கண்டுள்ளனர்.


தகுதிச் சுற்றில் தகுதி பெறும் அணியை தவிர மற்ற அணிகள் ஆசிய கோப்பைக்கான அணியை அறிவித்துவிட்டது. இந்நிலையில் அடுத்த வாரம் தொடங்கவுள்ள இந்த போட்டித் தொடரில் ஒவ்வொரு அணியும் மிகவும் பலமான அணியை தேர்ந்தெடுத்து அனுப்புகின்றன. உலககோப்பைக்கு முன்னதாக நடக்கும் இந்த போட்டியில் அணிக்கு மனரீதியாக பெறும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கில் மிகவும் பலமாகவே அணி கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பையை பொறுத்த வரை இந்திய அணி ஏழு முறையும், இலங்கை அணி ஐந்து முறையும், பாகிஸ்தான் அணி இரண்டு முறையும் கோப்பையை வென்றுள்ளன. ஆசியாவின் மினி உலககோப்பை என அழைக்கப்படும் ஆசிய கோப்பையை இந்த முறை வெல்ல இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு தான் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.