இந்தியாவில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் அடுத்த இந்திய அணி ஆடவர் தேர்வுக்குழு தலைவராக தேர்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணி அபாரமாக ஆடினாலும், அரையிறுதியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது. இந்திய அணி தோல்வி அடைந்ததை காட்டிலும் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றாமல் தோற்றது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்திய அணியின் டி20 மறுகட்டமைக்கப்படுகிறது என்ற தகவல்கள் பரவி வந்த நிலையில், கிரிக்கெட் வீரர்கள் தேர்வுக்குழுவை பி.சி.சி.ஐ. நீக்கியது. முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் ஷர்மா தலைமையில் செயல்பட்ட தேர்வுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நீக்கப்பட்டனர். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஏற்பட்ட தோல்வியே இந்த அதிரடி முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும், இந்திய அணியை தேர்வு செய்வதற்கான தேசிய தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கான விண்ணப்பங்களும் வரவேற்கப்படுவதாக பி.சி.சி.ஐ. தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது. இதையடுத்து, பல முன்னாள் இந்திய வீரர்கள் தங்களுக்கு விருப்பம் இருப்பதாக தெரிவித்து விண்ணப்பங்களை பதிவு செய்தனர்.
இந்தநிலையில், இந்தியாவில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் அடுத்த இந்திய அணி ஆடவர் தேர்வுக்குழு தலைவராக தேர்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
வெங்கடேஷ் பிரசாத் 1990 களில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர். அவர் 1996 முதல் 2001 வரை இந்திய அணிக்காக 33 டெஸ்ட் மற்றும் 161 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று 292 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதை தவிர 2007 டி 20 உலகக் கோப்பையில் இந்திய அணி கோப்பையை வென்றபோது பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இருந்தார். தொடர்ந்து, 2008-09 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளராகவும், பஞ்சாப் கிங்ஸின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இருந்தார். மேலும் கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசத்தின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்தார்.
2016 முதல் 2018 வரை 19 வயதுக்குட்பட்ட தேர்வாளராகவும் இருந்தார். இதில் இந்தியா ஒரு அண்டர்-19 உலக கோப்பை 2016ல் இறுதிப் போட்டி வரை சென்று 2018 ல் கோப்பையையும் வென்றது.
இந்திய அணி ஆடவர் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு தென்மண்டல சேர்ந்த டி வாசு, கன்வால்ஜித் சிங் ஆகியோர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த பதவிக்கு தேர்வாளர்கள் 60 வயதுக்குள் இருக்க வேண்டும் என்பதால் 64 வயதான கன்வால்ஜித் சிங் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதேபோல், மேற்கு மண்டலத்திலிருந்து மும்பை தலைமை தேர்வாளர் சலில் அன்கோலா முன்னணியில் உள்ளார். அவரை தொடர்ந்து, நயன் மோங்கியா மற்றும் சமீர் டிகே ஆகியோரும், கிழக்கு மண்டலத்தில் இருந்து, சுப்ரோதோ பானர்ஜி மற்றும் எஸ்எஸ் தாஸ் ஆகியோர் வலுவான போட்டியாளர்களாக உள்ளனர்.
மீண்டும் விண்ணப்பித்த சேத்தன் சர்மா:
பிசிசிஐ தேர்வாளரின் முன்னாள் தலைவர் சேத்தன் ஷர்மா அகில இந்திய தேர்வாளர்கள் குழுவில் மீண்டும் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். மேலும், மத்திய மண்டலத்திலிருந்து தேர்வுக் குழுவின் ஒரு பகுதியாக இருந்த ஹர்விந்தர் சிங்கும் பதவிக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளார்.