இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக். இவர் நடப்பாண்டில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடருக்கு பிறகு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆர்.சி.பி. அணியின் அதிரடி ஃபினிஷரான தினேஷ் கார்த்திக்கின் ஓய்வு ஆர்.சி.பி. ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்தது.


மீண்டும் பேட்ஸ்மேனாக திரும்பும் தினேஷ் கார்த்திக்:


இருப்பினும், அவரது பங்களிப்பு ஆர்.சி.பி. அணியில் இருக்க வேண்டும் என்பதை விரும்பிய அணி நிர்வாகம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆலோசகராக அவரை நியமித்தது. ஆர்.சி.பி. அணியின் ஆலோசகர் , தி ஹண்ட்ரட் தொடரில் வர்ணனையாளர் என இருக்கும் தினேஷ் கார்த்திக் மீண்டும் டி20 விளையாட்டு போட்டிகளில் களமிறங்க உள்ளார்.


தென்னாப்பிரிக்கா நாட்டில் சவுத் ஆப்ரிக்கா 20 என்ற தொடர் நடைபெற்று வருகிறது. எஸ்.ஏ.20 என்று அழைக்கப்படும் இந்த தொடர் அந்த நாட்டில் மிகவும் பிரபலம் ஆகும். இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடர் போலவே எஸ்.ஏ.20 கிரிக்கெட் தொடரிலும் பல நாட்டைச் சேர்ந்த பிரபல வீரர்களும் ஆடி வருகின்றனர்.


ரசிகர்கள் ஆர்வம்:


எஸ்ஏ20 கிரிக்கெட் தொடரில் மிகவும் முக்கியமான அணியாக திகழ்வது பார்ல் ராயல்ஸ் அணி ஆகும். அந்த அணியில் முக்கியமான வீரராக களமிறங்க அந்த அணி நிர்வாகம் தினேஷ் கார்த்திக்குடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் மீண்டும் டி20 கிரிக்கெட்டில் அதிரடி பேட்ஸ்மேனாக தினேஷ் கார்த்திக் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


39 வயதான தினேஷ் கார்த்திக் இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1 சதம், 7 அரைசதங்களுடன் 1025 ரன்கள் எடுத்துள்ளார். 94 ஒருநாள் போட்டிகளில் ஆடி 9 அரைசதத்துடன் 1752 ரன்கள் எடுத்துள்ளார்.


60 டி20 போட்டிகளில் ஆடி 686 ரன்கள் எடுத்துள்ளார். மும்பை, டெல்லி, ஆர்.சி.பி. என பல அணிகளுக்காக ஐ.பி.எல். தொடரில் ஆடியுள்ள தினேஷ் கார்த்திக் மொத்தம் 257 போட்டிகளில் ஆடி 22 அரைசதங்களுடன் 4842 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 97 ரன்கள் எடுத்துள்ளார்.


தினேஷ் கார்த்திக் மீண்டும் டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனாக திரும்பியிருப்பது அவரது ரசிகர்களுக்கும், ஆர்.சி.பி. ரசிகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுத் ஆப்ரிக்கா 20 தொடரில் மொத்தம் 6 அணிகள் ஆடி வருகின்றன. எம் ஐ கேப்டவுன், டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், பார்ல் ராயல்ஸ், ப்ரிட்டோரியா கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் தற்போது ஆடி வருகிறது. பொல்லார்ட், டுப்ளிசிஸ், டேவிட் மில்லர், மார்க்ரம் போன்ற முன்னணி வீரர்கள் இந்த தொடரில் ஆடி வருகின்றனர்.