இந்தியன் ப்ரீமியர் லீக்கில் அதிக ரசிகர்களை கொண்ட அணியாக வலம் வருவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதற்கு முக்கிய காரணம் எம்.எஸ்.தோனி. அதன்படி எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் வென்றது. ஆரம்பம் முதலே சிஎஸ்கே அணி ஐபிஎல்லின் ராஜாவாகவே திகழ்ந்து வருகிறது.


மகளிர் ப்ரீமியர் லீக்கில் இணையும் சிஎஸ்கே?


ஆடவர்களுக்கு எப்படி ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுகிறதோ அதேபோல் மகளிருக்காக கடந்த 2023 ஆம் ஆண்டில் இருந்து மகளிர் ப்ரீமியர் லீக் நடத்தப்பட்டு வருகிறது. இதில், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் UP வாரியர்ஸ் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன.






இச்சூழலில் தான் அடுத்த ஆண்டு அதாவது 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மகளிர் ப்ரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என். ஸ்ரீனிவாசனின் மகள் ரூபா குருநாத் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. 


இது தொடர்பாக சிஎஸ்கே நிர்வாகி ஒருவர் பேசுகையில், "மகளிர் கிரிக்கெட் மூலம் வரும் பொருளாதார நம்பகத்தன்மையை ஆராய்ந்து வருகிறோம். அதேபோல் கடந்த ஆண்டு மகளிர் தொடரில் பங்கேற்ற 5 ஐபிஎல் அணி நிர்வாகங்களின் அனுபவங்களையும் கேட்டு ஆராய்ந்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்.