முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட் அணிக்காக செய்ததை, இதுவரை எந்த ஒரு சர்வதேச அளவிலான கேப்டனும் செய்ய முடியவில்லை, இதுவரை இந்திய அணிக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே. 2011 ஒருநாள் உலகக் கோப்பையில் தோனி ஒரு சிக்ஸர் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 2004ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான தோனி, கடந்த 2007ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாகி, அதன் பிறகு இந்திய கிரிக்கெட்டை அணியை முன்னெடுத்து சென்ற விதம் பாராட்டுக்குரியது என முன்னாள் இந்திய வீரர்கள் பாராட்டி வந்தனர்.
அதே நேரத்தில், 2011ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற போது அந்த அணியில் இடம்பெற்றிருந்த கெளதம் கம்பீர், உலகக் கோப்பைக்கான கிரெடிட் ஒரு சிக்ஸருக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும், ஒட்டுமொத்த அணிக்கும் அல்ல என்றும் பலமுறை தனது கருத்தை தெரிவித்து விமர்சனங்களையும் எதிர்கொண்டுள்ளார். தொடர்ந்து, தோனி மற்றும் விராட் கோலி தொடர்பாக ஏதேனும் ஒரு கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து சமூக வலைதளங்களில் புகையையும் கிளப்புவார்.
இப்படி இருக்க, இந்த முறை தோனி குறித்து கம்பீர் பாராட்டி பேசிய கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. 2023 ஆசிய கோப்பையில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு தோனி பற்றி கம்பீர் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசியதாவது, “ எம்.எஸ். தோணி கேப்டனாக ஆகாமல் இருந்திருந்தால், அவர் தனது கேரியர் முழுவதும் 3வது இடத்தில் பேட் செய்திருப்பார். இதன்மூலம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் நிறைய ரன்கள் எடுத்திருப்பார். அணிக்காக தனது தியாகம் செய்து கோப்பையை வென்றார், அணிக்கு கொடுத்தார். ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களுக்கு மேல் எடுத்த சர்வதேச கிரிக்கெட்டில் 15 பேட்ஸ்மேன்கள் மட்டுமே உள்ளனர். இதில் பெரும்பாலான வீரர்கள் டாப் - ஆர்டரில் மட்டுமே பேட்டிங் செய்தவர்கள்.
ஆனால், மிடில் ஆர்டர் மற்றும் லோயர் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்த தோனி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் உள்ளார். தோனி நினைத்திருந்தால் மூன்றாம் இடத்திலேயே பேட்டிங் செய்திருக்கலாம். ஆனால், அப்படி இல்லாமல் அவர் ஐந்தாம், ஆறாவது அல்லது ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்தார்.” என தெரிவித்தார்.
கடைசியாக ஐசிசி டிராபி வென்றது எப்போது..?
முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையின் கீழ் இந்திய அணி 2007ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, 2011ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட பட்டங்களை வென்றது.
கடந்த 2013 ஆம் ஆண்டு டோனியின் தலைமையில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி வடிவத்தில் ஐசிசி கோப்பையை வென்றது. அதன்பிறகு எந்தவொரு ஐசிசி கோப்பையையும் இந்திய அணி வெல்லவில்லை. இம்முறை 2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியானது இந்தியாவில் வருகின்ற அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்குகிறது. இதில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பைக்கு முன், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2023 ஆசிய கோப்பையை வென்று அசத்தியுள்ளது.