இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை இருந்தார். அவருடைய பதவிக்காலம் முடிந்த பிறகு இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய பின்பு அவர் சில நாளிதழ் மற்றும் தளங்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.
அந்தவகையில் ரவிசாஸ்திரி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் சில விஷயங்கள் தொடர்பாக மனம் திறந்துள்ளார். அதில்,”2017ஆம் ஆண்டிற்கு முன்பாக நான் 9 மாதங்கள் இந்திய அணிக்கு மேலாளராக இருந்தேன். அப்போது இந்திய அணியில் எந்தவித பிரச்னையும் என்னை பொருத்தவரை நடக்கவில்லை. மேலும் நான் மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக வரக்கூடாது என்று பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் அவர்களின் முகத்தில் முட்டை அடித்த மாதிரி நான் மீண்டும் இந்திய பயிற்சியாளராக வந்தேன். மேலும் என்னுடைய பதவி காலத்தில் பரத் அருணை இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக விட கூடாது என்றும் பலரும் வேலை செய்தனர். அப்போதும் அது நடக்கவில்லை. பரத் அருண் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சு பயிற்சியாளராக உருவெடுத்தார். எனக்கு எதிராக பலரும் வேலை செய்தனர். அவர்களை சுட்டிக்காட்ட வேண்டும் என்பது என்னுடைய எண்ணமில்லை. எனக்கு பதவி கிடைக்க கூடாது என்று பலர் இருந்தனர் என்பதை காட்டவே இதை கூறினேன்.
2019ஆம் ஆண்டு 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வில் என்னுடைய கருத்து கேட்கப்படவில்லை. ஏனென்றால், அந்தத் தொடருக்கான இந்திய அணியில் தோனி, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் என மூன்று விக்கெட் கீப்பர்கள் இருந்தனர். ஒரே அணியில் 3 விக்கெட் கீப்பர்களை வைத்து என்ன செய்யபோகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. என்னை பொருத்தவரை அந்த அணியில் அம்பாத்தி ராயுடு அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவர் இருந்திருக்க வேண்டும். அப்போது என்னிடம் கருத்து கேட்கவில்லை” எனக் கூறியுள்ளார்.
ரவி சாஸ்திரி இந்திய பயிற்சியாளராக செயல்பாடு(2017-2021):
தொடர்கள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | பிற முடிவு | வெற்றி % |
---|---|---|---|---|---|
டெஸ்ட் | 43 | 25 | 13 | 5 | 58.1% |
ஒருநாள் | 76 | 51 | 22 | 3 | 67.1% |
டி20 | 65 | 45 | 18 | 2 | 69.2% |
ரவிசாஸ்திரி பதவிக்காலத்தில் இந்திய அணி முதலில் 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்றது. அதில் அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. இதைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டில் முதல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடியது. அதிலும் நியூசிலாந்து அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து கோப்பையை வெல்ல தவறியது. கடைசியாக 2021ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றது. அதில் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறி மேலும் ஒரு பெரிய ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. இந்திய அணிக்கு ஐசிசி கோப்பையை வென்று தரவில்லை என்றாலும் ரவி சாஸ்திரி நான்கு ஆண்டுகளில் இந்திய அணியை ஒரு சிறப்பான அணியாக கட்டமைத்தார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
மேலும் படிக்க: சிங்கத்தை அதன் குகையிலேயே சாய்த்த விராட்டின் படை- 3 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் செய்த சம்பவம் !