இந்திய கிரிக்கெட் அணி வரும் டிசம்பர் 26ஆம் தேதி முதல் தென்னாப்பிரிக்காவில் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்காக இந்திய அணி இந்த வாரம் இறுதியில் தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஒருநாள் தொடர் கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியிருந்தார். தற்போது விராட் கோலி இந்திய டெஸ்ட் அணிக்கு மட்டும் கேப்டனாக நீடிக்கிறார்.
விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி பல டெஸ்ட் தொடர்களில் வெற்றிப் பெற்று சரித்திரம் படைத்துள்ளது. அந்தவகையில் 3 ஆண்டுகளுக்கு முன்பாக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இதே நாளில் ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் தோற்கடித்தது. 2018ஆம் ஆண்டு கோலி தலைமையிலான இந்திய ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் சென்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்து இருந்தது. ஆகவே ஆஸ்திரேலிய தொடரிலும் இந்திய அணி தோல்வி அடையும் என்று பலரும் கணித்து இருந்தனர். இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது.
அந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணியில் புஜாராவின் (123) சதத்தால் 250 ரன்கள் எடுத்தது. அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அஸ்வின் மற்றும் பும்ரா தலா 3 விக்கெட் எடுத்தனர். இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் புஜாரா(70), ரஹானே(71) ஆகியோரின் ஆட்டத்தால் இந்திய அணி 307 ரன்கள் குவித்தது. அத்துடன் ஆஸ்திரேலிய அணிக்கு இலக்காக 323 ரன்களை நிர்ணயித்தது.
முதல் இன்னிங்ஸை போல் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் தடுமாற தொடங்கியது. பும்ரா, அஸ்வின் மற்றும் முகமது ஷமி ஆகிய மூவரின் பந்துவீச்சை சமாளிக்க ஆஸ்திரேலிய திணறியது. மார்ஷ் மட்டும் 60 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 291 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மேலும் 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி தன்னுடைய முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்திருந்தது. இதற்கு முன்பாக 2008ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இருந்தது.
இந்தத் தொடரின் முதல் டெஸ்டில் மட்டுமல்லாமல் மூன்றாவது டெஸ்டிலும் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று சாதனை படைத்தது. ஆஸ்திரேலிய மண்ணில் முதல் டெஸ்ட் தொடரை வென்ற ஆசிய அணியாக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி படைத்தது.
மேலும் படிக்க:ஆஷஸ் தொடரில் கிரவுண்டில் காதலிக்கு ப்ரோபோஸ் - அக்செப்ட் செய்து ‘லிப் டூ லிப்’ அடித்த காதலி..!