நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மிகவும் சிறப்பான வீரர்களில் ஒருவர் டேனியல் வெட்டோரி. இவர் நியூசிலாந்து அணிக்காக 113 டெஸ்ட் போட்டிகள், 295 ஒருநாள் போட்டிகள் மற்றும் 34 டி20 போட்டிகளில் களமிறங்கியுள்ளார். இவர் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் ஆகிய இரண்டில் சிறப்பாக செயல்பட்டு பல முறை நியூசிலாந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றவர். 


இன்று அவர் தன்னுடைய 43ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் வெட்டோரி தொடர்பான சில அரிதான தகவல்கள்: 



  • நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் விளையாடிய முதல் இத்தாலி வம்சாவளியைச் சேர்ந்த நபர் வெட்டோரி தான். இவருடைய தந்தை இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். இவருடைய தாய் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். 

  • டேனியில் வெட்டோரி கிரிக்கெட் களத்தில் இடது கையில் பந்துவீசுவதும், வலது கையில் பேட்டிங் செய்தும் வந்தார். ஆனால் உண்மையில் இவருக்கு இரண்டு கைகளில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் ஆகிய இரண்டும் வரும் என்பது மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. 

  • நியூசிலாந்து அணிக்காக மிகவும் குறைந்த வயதில் விளையாடிய வீரர் என்ற பெருமையை வெட்டோரி தன்வசம் வைத்துள்ளார். இவர் 1997ஆம் ஆண்டு தன்னுடைய 18 வயதில் நியூசிலாந்து அணிக்காக களமிறங்கினார். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் தான் இவருடைய முதல் டெஸ்ட் விக்கெட் ஆவார்.

  • 8ஆவது இடத்தில் டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் இவர் தன்வசம் வைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இவர் 8ஆவது இடத்தில் களமிறங்கி 2227 ரன்கள் விளாசியுள்ளார். மேலும் அந்த இடத்தில் இவர் 4 சதம் மற்றும் 13 அரைசதங்களையும் அடித்துள்ளார். 

  • டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 300 விக்கெட்கள் மற்றும் 3000 ரன்கள் கடந்த 8ஆவது வீரர் டேனியல் வெட்டோரி தான். இவர் 113 டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி 4531 ரன்கள் மற்றும் 362 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 





  • குறைவான வயதில் 100 டெஸ்ட் விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையையும் டேனியல் வெட்டோரி தன்வசம் வைத்துள்ளார். இவர் 2000ஆம் ஆண்டு ஆக்லாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தன்னுடைய 21ஆவது வயதில் 100 டெஸ்ட் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 

  • கிரிக்கெட் களத்தில் தன்னுடைய அறிமுகம் முதல் கடைசி வரை கண்ணாடி அணிந்து விளையாடிய வீரர்களில் வெட்டோரியும் ஒருவர். அவருக்கு கண்ணாடி அணிந்து விளையாடுவது மிகவும் பிடித்துள்ளது. இதுகுறித்து, “நான் என்னுடைய 3 வயது முதல் கண்ணாடி அணிந்து வருகிறேன். ஆகவே அதை எடுத்து விளையாட எனக்கு விருப்பமில்லை. மேலும் கண்ணாடி இல்லை என்றால் என்னை சிலர் ஆடையாளம் கொள்ள மாட்டார்கள்” எனக் கூறினார். 

  • நியூசிலாந்து அணிக்காக 5 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். 1999 உலகக் கோப்பை தொடர் முதல் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரை இவர் 5 தொடர்களில் பங்கேற்றுள்ளார். மொத்தமாக உலகக் கோப்பை தொடர்களில் இவர் 36 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 

  • 2011ஆம் ஆண்டு நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக இவர் செய்த சேவையை அந்நாட்டு அரசு பாராட்டி கௌரவித்தது. அந்த நாட்டில் வழங்கப்படும் ஆர்டர் ஆஃப் மெரிட் என்ற பட்டத்தை இவருக்கு வழங்கியது. 

  • நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் கண்ணாடி அணிந்து இவர் பந்துவீசும் போது பார்ப்பதற்கு ஹாரி பாட்டர் போல் உள்ளார் என்று பலரும் கூறிவந்தனர். இதன்காரணமாக இவருடைய பட்டை பெயர் ஹாரி பாட்டர் என்று அமைந்தது.