இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் பயிற்சியாளருமான அன்ஷுமான் கெய்க்வாட்டின் தந்தையும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான தத்தாஜிராவ் கெய்க்வாட் இன்று காலை  பரோடாவில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவருக்கு தற்போது வயது 95. இவரே தற்போதுவரை இந்தியாவின் மிக நீண்ட டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஆவார். தத்தாஜிராவும் இந்தியாவுக்காக 9 ஆண்டுகள் விளையாடியுள்ளார். 


தத்தாஜிராவ் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட்டின் தந்தை ஆவார். அன்ஷுமான் இந்தியாவுக்காக 40 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அன்ஷுமான் 1975 முதல் 1987 வரை இந்தியாவுக்காக விளையாடியுள்ளார். 


தத்தாஜிராவ் கெய்க்வாட் அறிமுகம்:


கடந்த 1952ம் ஆண்டு தத்தாஜிராவ் கெய்க்வாட் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது முதல் டெஸ்டில் அறிமுகமானார். அதன்பிறகு, அவர் இந்தியாவுக்காக 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் தனது கடைசி டெஸ்டில் 1961 இல் பாகிஸ்தானுக்கு எதிராக சென்னையில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் அறிமுகமான பிறகு, தத்தாஜிராவ் கெய்க்வாட் மோசமான பார்ம் காரணமாக சில காலம் அணியில் இருந்து வெளியேறினார்.






அதன்பிறகு, கடந்த 1959 ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தத்தாஜிராவ் மீண்டும் கேப்டனாக களமிறங்கி இந்திய அணியை வழிநடத்தினார். அப்போது, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 110 ரன்கள் மட்டுமே அடித்தார். இதன் காரணமாக, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 5-0 என்ற கணக்கில் வென்றது. 


பரோடா அணியில் பட்டையை கிளப்பிய தத்தாஜிராவ்:


இந்த சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, தத்தாஜிராவ் நீண்ட காலமாக உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது திறமையை நிரூபித்தார். உதாரணத்திற்கு 1957-58 சீசனில், பரோடா அணி முதல்முறையாக ரஞ்சி கோப்பையை வென்றது. அப்போது, பரோடா அணிக்கு தலைமை தாங்கி வென்று கொடுத்தவர் தத்தாஜிராவ் கெய்க்வாட்தான். சர்வீசஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தத்தாஜிராவ் கெய்க்வாட் சதம் (132) அடித்து முக்கிய பங்காற்றினார். தத்தாஜிராவ் கெய்க்வாட் இதுவரை 110 முதல் தர போட்டிகளில் விளையாடி 17 சதங்களின் உதவியுடன் 5788 ரன்கள் எடுத்தார். ஆட்டமிழக்காமல் 249 ரன்கள் எடுத்தது இவரது சிறந்த ஸ்கோராகும். 


2016 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார் தத்தாஜிராவ் கெய்க்வாட். இவருக்கு முன், தீபக் ஷோதன் இந்தியாவின் மிகவும் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரராக இருந்தார். முன்னாள் பேட்ஸ்மேன் தீபக்  ஷோதன் தனது 87வது வயதில் அகமதாபாத்தில் காலமானார். தற்போது தத்தாஜிராவ் கெய்க்வாட் தனது 95 வயதில் காலமாகியுள்ளார்.