Devdutt Paddikal Stats & Records: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்றாவது போட்டியில் இந்திய அணி பின்னடைவை சந்தித்துள்ளது. காயம் காரணமாக் வெளியேறியுள்ள கே.எல்.ராகுல், ராஜ்கோட்டில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ தெரிவித்தது. அதேநேரத்தில், கே.எல்.ராகுலுக்கு பதிலாக கர்நாடக வீரர் தேவ்தத் படிக்கல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முதல்தர போட்டியில் தேவ்தத் படிக்கல் அசத்தல்:
கடந்த 6 முதல் தர போட்டியில் தேவ்தத் படிக்கல் 4 முறை சதம் கடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் போன்ற பேட்ஸ்மேன்கள் இல்லாத நிலையில் தேவ்தத் படிக்கல் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று இந்திய ரசிகர்கள் நம்புகிறார்கள். முன்னதாக, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தேவ்தத் படிக்கல் 105 ரன்கள் எடுத்திருந்தார். அதற்கு பிறகு, ரஞ்சி டிராபியில் கர்நாடகா அணிக்காக களமிறங்கிய அவர், பஞ்சாப் அணிக்கு எதிராக 103 ரன்களும், கோவா அணிக்கு எதிராக 103 ரன்களும் எடுத்தார்.
தொடர்ந்து, சமீபத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற தமிழ்நாட்டிற்கு எதிரான போட்டியில் 151 ரன்கள் குவித்தார் தேவ்தத் படிக்கல். ரஞ்சிக் கோப்பையின் கடைசி 4 ஆட்டங்களில் 92.66 சராசரியில் 556 ரன்கள் குவித்துள்ளார் தேவ்தத் படிக்கல். இதில் 3 சதங்களும் அடங்கும். இதன் காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் தேவ்தத் படிக்கல் நிச்சயம் அறிமுகம் செய்வார் என்று நம்பப்படுகிறது.
முதல்தர கிரிக்கெட்டில் தேவ்தத் படிக்கலின் சாதனை என்ன?
தேவ்தத் படிக்கல் வெறும் 31 முதல் தர போட்டிகளில் 12 சதங்கள் உள்பட 2200 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.
ஆண்டுகள் | போட்டிகள் | இன்னிங்ஸ் | ரன்கள் | சராசரி | ஸ்ட்ரைக் ரேட் | 50/100 | அதிகப்பட்ச ஸ்கோர் |
---|---|---|---|---|---|---|---|
2018 - தற்போது வரை | 31 | 53 | 2227 | 44.54 | 59.45 | 6 / 12 | 193 |
2023-2024 சீசனில் தேவ்தத் படிக்கலின் பேட்டிங் எப்படி?
இந்த ஆண்டு தேவ்தத் படிக்கல் இதுவரை கர்நாடகா மற்றும் இந்தியா ஏ அணிக்காக இடம்பெற்றுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி சீசனில் கர்நாடகாவுக்காக படிக்கல் மூன்று சதங்களை அடித்தார். இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா ஏ அணிக்காக விளையாடிய தேவ்தத் படிக்கல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 191 ரன்கள் எடுத்தார்.
இந்த ஆண்டு இதுவரை ரெட்-பால் கிரிக்கெட்டில் கர்நாடகா மற்றும் இந்தியா ஏ அணிக்காக படிக்கலின் சாதனை இதோ.
போட்டிகள் | இன்னிங்ஸ் | ரன்கள் | சராசரி | ஸ்ட்ரைக் ரேட் | 50 | 100 | அதிகப்பட்ச ஸ்கோர் |
---|---|---|---|---|---|---|---|
6 | 9 | 747 | 83.00 | 76.85 | 1 | 4 | 193 |
3 ஆண்டுகளுக்கு இந்திய ஜெர்சியில் தேவ்தத் படிக்கல்:
2021 இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இடம் பெற்ற தேவ்தத் படிக்கல், அந்த சுற்றுப்பயணத்தில் 2 டி20 போட்டிகளில் விளையாடி 38 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன் பிறகு அவர் இந்திய அணியில் இடம்பெறவே இல்லை. இப்போது, நீண்ட காத்திருப்புக்குப் பிறகு தற்போது அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.
மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:
ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர். , குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், தேவ்தத் படிக்கல்.