கிரிக்கெட் உலகில் டி20 வந்த பிறகு ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் மக்களின் ஆர்வம் சற்று குறைந்து வருவதாக பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஃப்ரிதி கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் ஆஃப்ரிதியின் கருத்திற்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆதரவ அளித்துள்ளார். இது தொடர்பாக ரவி சாஸ்திரி ஆங்கில தளம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், “ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஓவர்களை குறைப்பதில் எந்தவித தவறும் இல்லை. ஏனென்றால் முதலில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் 60 ஓவர்களாக இருந்தது. நாங்கள் 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை விளையாடிய போது 60 ஓவர்களாக ஒருநாள் போட்டிகள் இருந்தன. 60 ஓவர்கள் என்பது மக்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. அதிலும் குறிப்பாக 20 முதல் 40 ஓவர்களில் பார்ப்பதற்கு மிகவும் கடினமாக அமைந்தது என்று ரசிகர்கள் நினைத்தனர். 




இதன்காரணமாக 60 ஓவர்களாக இருந்த போட்டி 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தற்போது அந்த 50 ஓவர்கள் போட்டியும் சற்று பெரிதாக தெரிகிறது. அதை தற்போது நாம் குறைப்பதில் எந்தவித தவறுமில்லை. முன்னேற்றத்தை நோக்கி நகரும் போது இதுபோன்ற மாற்றங்கள் நிச்சயம் அவசியமான ஒன்று” எனத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அஃப்ரிதி தெரிவித்த கருத்திற்கு ஆதரவாக இந்த கருத்து அமைந்துள்ளது. 


முன்னதாக இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அஃப்ரிதி, “ஒருநாள் கிரிக்கெட் போட்டி சற்று சலிப்பை  ஏற்படுத்தியுள்ளது. ஆகவே 50 ஓவர்கள் கொண்ட போட்டியை 40 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்ற வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்திற்கு பல தரப்பட்ட விமர்சனங்கள் வந்தது. இந்தச் சூழலில் ரவி சாஸ்திரி அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


2023ஆம் ஆண்டு ஐசிசி 50 ஓவர்கள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. அந்தத் தொடருக்கு முன்பாக ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் எந்தவித மாற்றமும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண