ஐபிஎல் தொடரில் 2008ஆம் ஆண்டு முதல் டெல்லி அணி இடம்பெற்று வருகிறது. எனினும் ஒரு முறை கூட டெல்லி அணி ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. இந்தச் சூழலில் தற்போது ஐபிஎல் தொடர் மட்டுமல்லாம வெளிநாட்டு டி20 தொடர்களிலும் டெல்லி அணி கால்பதிக்க உள்ளது.
இது தொடர்பாக டெல்லி அணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளது. அதில், “டெல்லி அணி தற்போது உலகளவில் வளர்ந்துள்ளது. துபாய் கேபிடல்ஸ் மற்றும் பிரிடோரியா கேபிடல்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் புதிதாக இணைய உள்ளன” எனப் பதிவிட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா டி20 தொடரிலுள்ள 6 அணிகளை ஐபிஎல் அணிகள் வாங்கியுள்ளன. அவற்றில் பிரிடோரியா அணியை டெல்லி அணி குழுமம் வாங்கியுள்ளது. அதேபோல் யுஏஇயில் நடைபெற்ற டி20 தொடரில் துபாய் அணியை டெல்லி அணி குழுமம் வாங்கியுள்ளது. தென்னாப்பிரிக்கா டி20 தொடர் வரும் 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது.
2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி டெர்டேவில்ஸ் அணியை ஜி.எம்.ஆர் குழுமம் வாங்கியது. அப்போது முதல் 10 ஆண்டுகள் டெல்லி அணியை ஜி.எம்.ஆர் நிறுவனம் வைத்திருந்தது. 2018ஆம் ஆண்டு ஜி.எம்.ஆர் நிறுவனம் 50 சதவிகித பங்குகளை ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்திடம் வழங்கியது. அப்போது முதல் டெல்லி டெர்டேவில்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்தப் பெயருடன் தற்போது டெல்லி அணி ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறது.
வெளிநாட்டு டி20 தொடர்களில் முதல் முறையாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் நுழைந்தன. வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் இந்த இரண்டு ஐபிஎல் அணிகளும் கால் பதித்தன. அங்கு இரண்டு அணிகளை வாங்கியிருந்தன. அப்போது முதல் உலகத்தின் பல்வேறு டி20 தொடர்களில் ஐபிஎல் அணிகள் கால்பதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்