ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி வருகின்ற டிசம்பர் - ஜனவரி மாதங்களில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த சுற்றுபயணத்தின்போது ஆஸ்திரேலிய அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவங்களில் விளையாடுகிறது.
இந்தநிலையில், இந்திய சுற்றுப்பயணத்திற்கு முன்பாக ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அலிசா ஹீலியை மூன்று வடிவங்களிலும் கேப்டனாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா நியமித்துள்ளது. மேலும், ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனாக தஹ்லியா மெக்ராத் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த மெக் லானிங் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றபிறகு இந்த அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
முன்னதாக, மெக் லானிங் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் மூன்று வடிவங்களிலும் கேப்டனாக இருந்தார். இந்த சூழலில்தான் தனது உடல்நிலையை கருத்தில்கொண்டு ஓய்வுபெறுவதாக மெக் லானிங் அறிவித்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி அலிசா ஹீலி நியமிக்கப்பட்டுள்ளார். ஹீலி தலைமையில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இந்திய சுற்றுப்பயணத்தை டிசம்பர் 21 முதல் ஒரே டெஸ்ட் போட்டியுடன் தொடங்கவுள்ளது. இதன் பிறகு, இரு அணிகளும் டிசம்பர் 28 முதல் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், ஜனவரி 05 முதல் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளன.
இதற்கு முன்பும் ஹீலி அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். இடைக்கால கேப்டனாக இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் எதிராக கேப்டனாக இருந்துள்ளார். இதுதவிர, துணை கேப்டனாக பதவியேற்ற தஹ்லியா மெக்ராத், ஆஸ்திரேலிய மகளிர் அணியின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். அலிசா ஹீலி இல்லாத போது அவர் இரண்டு முறை அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார்.
அலிசா ஹீலி:
ஆஸ்திரேலியாவின் அனுபவமிக்க வீராங்கனைகளில் அலிசா ஹீலியும் ஒருவர். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக மூன்று வடிவங்களிலும் விளையாடுகிறார். ஹீலி இதுவரை 7 டெஸ்ட், 101 ஒருநாள் மற்றும் 147 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் டெஸ்டில் 12 இன்னிங்ஸ்களில் 2 அரை சதங்கள் உட்பட 286 ரன்கள் எடுத்துள்ளார். இது தவிர, ஒருநாள் போட்டியில் 89 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்த அவர், 35.39 சராசரியில் 2761 ரன்கள் எடுத்துள்ளார். இந்த காலகட்டத்தில், அவர் தனது பேட்டிங் மூலம் 5 சதங்கள் மற்றும் 15 அரை சதங்களை அடித்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் 129 இன்னிங்ஸ்களில் 1 சதம் மற்றும் 15 அரை சதங்கள் உட்பட 2621 ரன்கள் எடுத்துள்ளார்.