முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வுபெற்ற தோனி, தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்தியாவுக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே. இவரது தலைமையின் கீழ் கடந்த 2007ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றது. அதனை தொடர்ந்து 2011 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 ஐசிசி சாம்பியன் டிராபியை இந்திய அணி வென்றது. 


2004 ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் தோனி தனது சர்வதேச வாழ்க்கையை தொடங்கிய தோனி, ஐபிஎல் 2023 இவரது கேப்டன்சியின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக சாம்பியன் ஆனது.


சர்வதேச கிரிக்கெட்டில் தோனி பல சாதனைகளை படைத்துள்ளார். அதே சமயம் இது வரை யாராலும் முறியடிக்க முடியாத சில சாதனைகளை இங்கே பார்க்கலாம்.



  • ஒரு விக்கெட் கீப்பிங் கேப்டனாக 60 டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கியுள்ளார் எம்.எஸ்.தோனி. வேறு ஒரு விக்கெட் கீப்பர் இத்தகைய சாதனையை செய்யவில்லை.

  • ஒரு ஒருநாள் போட்டியில் 6 பேட்ஸ்மேன்களை ஸ்டம்பிங் மற்றும் கேட்சுகளால் ஆட்டமிழக்க செய்துள்ளார் எம்.எஸ்.தோனி


7வது இடத்தில் சதம்:


ஒருநாள் கிரிக்கெட்டில் ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்து சதம் அடித்த ஒரே கேப்டன் தோனி மட்டுமே. 2012 டிசம்பரில் பாகிஸ்தானுக்கு எதிராக 5-டவுன் நிலையில் பேட்டிங் செய்யும் போது சதம் அடித்தார். பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் சர்வதேச சதத்தையும் அடித்தார். 


விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக அதிக தனிநபர் ஸ்கோர் :


ஒருநாள் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். 2005 ஆம் ஆண்டில், இலங்கைக்கு எதிரான ஒரு மேட்ச்-வின்னிங் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 183 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸ் 15 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களும் விளாசப்பட்டது. முன்னதாக, ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட் 2004 இல் ஜிம்பாப்வேக்கு எதிராக 172 ரன்கள் எடுத்திருந்தார்.  


கேப்டன்சி ரெக்கார்ட்: 


அதிக ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தவர் என்ற சாதனையை எம்எஸ் தோனி படைத்துள்ளார். அவர் 200 போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இந்திய அணிக்காக அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 


மேலும் சில.. 



  • ஒரு விக்கெட் கீப்பிங் கேப்டனாக தோனி 200 ஒருநாள் போட்டிகளில் தலைமை தாங்கியுள்ளார்.

  • சர்வதேச டி20யில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 5 பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழக்க செய்துள்ளார்.

  • சர்வதேச டி20 போட்டிகளில் 72 போட்டிகளில் விக்கெட் கீப்பிங் கேப்டனாக செயல்பட்ட முதல் வீரர்

  • ஒரு கேப்டனாக 332 சர்வதேச போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ளார்.

  • சர்வதேச டி20யில் 34 ஸ்டம்பிங்குகள், ஒட்டுமொத்த சர்வதேச வாழ்க்கையில் 195 ஸ்டம்பிங்குகள். 


கேப்டனாக புள்ளிவிவரங்கள்: 


டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு கேப்டனாக தோனி 60 போட்டிகளில் விளையாடி, அதில் 27 வெற்றி, 18 தோல்வியை சந்தித்துள்ளது. இது தவிர, ஒருநாள் போட்டிகளில், இந்திய அணிக்காக தோனி 200 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு, அதில் 110 போட்டிகளில் வெற்றி, 74 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. டி20 போட்டியில் தோனி டீம் இந்தியாவுக்காக கேப்டனாக 72 போட்டிகளில் விளையாடியுள்ளார், அதில் இந்திய அணி 42 போட்டிகளில் வெற்றி மற்றும் 28 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.  


சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை: 


தோனி 2004 முதல் 2019 வரை தனது சர்வதேச வாழ்க்கையில் 90 டெஸ்ட், 350 ஒருநாள் மற்றும் 98 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 144 இன்னிங்ஸ்களில், 38.09 சராசரியில் 4876 ரன்கள் எடுத்தார். இது தவிர, ஒருநாள் போட்டிகளில் 50.57 சராசரியில் 10773 ரன்கள் சேர்த்துள்ளார். டி20 சர்வதேசப் போட்டியில் தோனி 37.60 சராசரியிலும் 126.13 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 1617 ரன்கள் எடுத்தார். தோனி தனது சர்வதேச வாழ்க்கையில் மொத்தம் 16 சதங்களும், 108 அரைசதங்களும் அடித்துள்ளார்.