உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி உலகக்கோப்பை தொடருக்கு தகுதிப் பெற்று அசத்தியுள்ளது. 


நடப்பாண்டு உலகக்கோப்பை தொடர்  வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில்,  இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் நேரடியாக தகுதிப் பெற்றது. மீதமுள்ள இரண்டு இடங்களுக்கான போட்டிகள் ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வருகின்றது. 


இதில் ஜிம்பாப்வே, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் மோதியது. இந்த மோதலில் இலங்கை 9வது அணியாக தகுதிப் பெற்றது. வெஸ்ட் இண்டீஸ், ஓமன், ஜிம்பாப்வே அணிகள் போட்டியில் இருந்து வெளியேறியது. இதனால் உலகக்கோப்பைக்கு தகுதிப் பெறும் 10வது அணி எது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. 


இதனை நிர்ணயிக்கும் போட்டியில் ஸ்காட்லாந்து, நெதர்லாந்து அணிகள் இன்று மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களம் கண்ட ஸ்காட்லாந்து அணியில், தொடக்க வீரர் மேத்யூ கிராஸ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானர். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் கிறிஸ்டோபர் மெக்பிரைட்- பிரண்டன் மெக்மல்லன் ஜோடி நெதர்லாந்து பந்து வீச்சை விளாசியது. இதனால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 


மெக்பிரைட் 32 ரன்களில் அவுட்டாக, மெக்மல்லன்  அதிரடியாக ஆடி சதமடித்தார். பின்னால் வந்த வீரர்களில் கேப்டன் ரிச்சி பெரிங்டன் 64 ரன்களும், தாமஸ் மெகிண்டோச் 38 ரன்களும் எடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஸ்காட்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் குவித்தது. நெதர்லாந்து அணி தரப்பில் பாஸ் டி லீடி சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 


இதனைத் தொடர்ந்து 278 ரன்கள் எடுத்தால் உலகக்கோப்பையில் விளையாடலாம் என்ற முனைப்புடன் வெற்றியை நோக்கி நெதர்லாந்து விளையாட தொடங்கியது. பந்துவீச்சில் மிரட்டிய லீடே பேட்டிங்கிலும் ஸ்காட்லாந்து அணிக்கு தண்ணி காட்டினார். அவர் 123 ரன்கள் குவிக்க அந்த அணிக்கு வெற்றி இலக்கு எளிதானது. ஸ்காட்லாந்து அணி 42.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக்கோப்பைக்கு தகுதிப் பெற்றது. 


விசித்தர அணியாக நெதர்லாந்து 


கடந்த ஓராண்டாகவே நெதர்லாந்து அணி எதிர்பாராத பல சம்பவங்களை கிரிக்கெட்டில் செய்து வருகிறது. டி20 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. தொடர்ந்து ஒரு போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயித்த 374 ரன்களை சூப்பர் ஓவர் உதவியுடன் சேஸ் செய்து அதிர்ச்சி கொடுத்தது. தற்போது ஸ்காட்லாந்தை வீழ்த்தியுள்ளது.