கிரிக்கெட் உலகில் வீரர்களை போல் வெகு சில நடுவர்கள் மிகவும் பிரபலம் அடைந்தனர். அப்படி பிரபலம் அடைந்த நடுவர்களில் ஒருவர் ஆசாத் ராஃப். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆசாத் ராஃப் மாரடைப்பு காரணமாக இன்று இயற்கை எய்தியுள்ளார்.
இந்நிலையில் ஆசாத் ராஃப் எத்தனை போட்டிகளில் நடுவராக செயல்பட்டார்? எப்படி பிரபலம் அடைந்தார்?
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆசாத் ராஃப் உள்ளூர் முதல் தர போட்டிகளில் கிரிக்கெட் வீரராக களமிறங்கி வந்தார். இவர் அந்நாட்டின் தேசிய வங்கி மற்றும் ரயில்வே அணிகளுக்காக களமிறங்கி விளையாடினார். இவர் சுமார் 71 முதல் தர போட்டிகளில் விளையாடினார். அதன்பின்னர் அவர் நடுவராக மாற விரும்பியுள்ளார். இதைத் தொடர்ந்து நடுவராக பணியாற்ற தொடங்கியுள்ளார்.
2000ஆம் ஆண்டு முதல் இவர் நடுவராக களமிறங்க தொடங்கினார். 2000ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் நடுவராக செயல்பட்டு வந்தார். அதன்பின்னர் 2005ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நடுவராக செயல்பட தொடங்கினார். 2006ஆம் ஆண்டு ஐசிசியின் இலைட் பிரிவு நடுவர்கள் பட்டியலில் இடம்பெற்றார்.
2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது இவர் மீது மேட்ச் ஃபிக்சிங் புகார் எழுந்தது. இவர் ஐபிஎல் தொடரின் போது மேட்ச் ஃபிக்சிங் தொடர்பாக சிலருடன் பேசியதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து இவருடைய நடுவர் வாழ்க்கை சற்று குறைய தொடங்கியது. ஏனென்றால் அந்தாண்டு இருந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இவர் நடுவராக செயல்படும் வாய்ப்பை இழந்தார். அத்துடன் ஐசிசியின் இலைட் நடுவர்கள் பட்டியலில் இருந்தௌ இவர் நீக்கப்பட்டார்.
இவர் மீது இருந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. 2016ஆம் ஆண்டு பிசிசிஐ இவரை 5 ஆண்டுகள் நடுவராக செயல்பட தடை விதித்தது. இதைத் தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் நடுவராக செயல்படும் வாய்ப்பு அவருக்கு குறைந்தது. எனினும் ஐசிசி இவர் மீது தடை விதிக்கவில்லை. பாகிஸ்தானிலிருந்து மற்றொரு நடுவர் அலிம் தார் ஐசிசியின் இலைட் பட்டியலில் இணைந்த பிறகு ஆசாத் ராஃப் வாய்ப்பு முற்றிலும் குறைந்தது குறிப்பிடத்தக்கது. இவர் மொத்தமாக 170 சர்வதேச போட்டிகளில் நடுவராக செயல்பட்டார். அத்துடன் 2007 மற்றும் 2011 உலகக் கோப்பை தொடர்களில் நடுவராக செயல்பட்டார்.
இவருடைய மரணம் தொடர்பாக கிர்க்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ட்விட்டரில் தங்களுடைய அஞ்சலியை பதிவிட்டு வருகின்றனர்.