வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) மோசடி தொடர்பாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
பிஎஃப் ஊழல்:
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா வருங்கால வைப்பு நிதி மோசடியில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக பிஎஃப் ஆணையர் சடாக்சரி கோபால் ரெட்டி இந்த கைது வாரண்டை பிறப்பித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Prithvi Shaw: 6 மணிக்கு ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
23 லட்சம் மோசடி:
செஞ்சுரிஸ் லைஃப்ஸ்டைல் பிராண்ட் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்தின் நிர்வாகத்தை ராபின் உத்தப்பா நடத்தி வந்தார். இந்த நிறுவன ஊழியர்களின் சம்பள பணத்தில் பிஎப் பிடித்தம் செய்துவிட்டு, பின்னர் அதை அவரது கணக்கில் சேர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.23 லட்சம் என்று கூறப்படுகிறது.
மாறிய முகவரி:
டிசம்பர் 4 அன்று, பி.எப் கமிஷனர் ரெட்டி உத்தப்பாவுக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்குமாறு காவல்துறையிடம் கேட்டார், ஆனால் உத்தப்பா தனது முகவரியை மாற்றி இருப்பது தெரிய வந்தது, இதனால் கைது வாரண்ட் திரும்ப பெறப்பட்டு தற்போது அவரது புதிய முகவரியை கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விதிகளின்படி, எந்தவொரு நிறுவனமும் தனது ஊழியர்களின் பி.எப் தொகையை பி.எஃப் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அது சட்டத்தை மீறுவதாகவும், நிதியை தவறாகப் பயன்படுத்துவதாகவும் கருதப்படுகிறது. அதை தான் உத்தப்பாவும் செய்துள்ளார். தற்போது அவரை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் ஊழியர்களின் பாதுகாப்பு தொடர்பானது என்பதால், காவல்துறையும், பிஎஃப் துறையும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன.
கிரிக்கெட் வாழ்க்கை:
மகேந்திர சிங் தோனியின் தலைமையில் 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் உத்தப்பா இடம்பெற்றிருந்தார். உத்தப்பா இந்தியாவுக்காக 46 ஒருநாள் மற்றும் 13 டுவென்டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது