இங்கிலாந்தின் இளம் வேகப்பந்து வீச்சாளர் சாம் கர்ரன். இந்த முறை டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் முக்கிய ஆட்டக்காரராக திகழ்ந்தவர்.
பாகிஸ்தானுக்கு எதிரான பைனல் ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை சுருட்டி வெறும் 12 ரன்களே விட்டுக் கொடுத்த பந்துவீச்சாளர் சாம் கர்ரன்.
பாகிஸ்தான் அதிக ரன்களைக் குவிக்காமல் கட்டுப்படுத்தியதில் சாம் கர்ரனுக்கு முக்கியப் பங்கு உண்டு.
ஆட்டநாயகன் விருதையும் தொடர் நாயகன் விருதையும் வென்றார் சாம் கர்ரன். முன்னதாக, பாகிஸ்தானை இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.
சிஎஸ்கே அணிக்காக விளையாடியவரான சாம் கர்ரன், அந்த அணியால் சுட்டிக் குழந்தை என செல்லமாக அழைக்கப்பட்டவர். நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை கைப்பற்றிய சாம் கர்ரன் புகைப்படத்தை சமூக வலைதளமான ட்விட்டரில் பகிர்ந்து "கடைக்குட்டி முதலிடத்துக்கு வந்திருக்கிறார்! சிறப்பு சாம் சி!" என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளது சிஎஸ்கே அணி நிர்வாகம்.
இந்தத் தொடரில் எத்தனை விக்கெட்?
ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் மாதம் 16ம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெற்ற டி20 கிரிக்கெட் திருவிழாவில் மொத்தமாக தனது அணிக்காக 13 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார் சாம் இந்தக் கடைக்குட்டி (சாம் கர்ரன்). நடப்பு தொடரில் மொத்தம் 7 ஆட்டங்களில் விளையாடி அவர் இந்த ரெக்கார்டை பதிவு செய்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 குரூப் 1 பிரிவு முதல் ஆட்டத்திலேயே 3.4 ஓவர்கள் வீசி வெறும் 10 ரன்களே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார் சாம் கர்ரன். முதல் ஆட்டத்திலேயே ஆட்டநாயகனாக தனது பயணத்தை இந்தத் தொடரில் ஆரம்பித்தார்.
அயர்லாந்துக்கு எதிரான இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வியைத் தழுவினாலும் அந்த ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் சாம் கர்ரன். இதையடுத்து, நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டையும் சுருட்டினார்.
இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் மட்டுமே சாம் கர்ரனுக்கு விக்கெட் எதுவும் கிடைக்கவில்லை. எகானமியும் அதிகம் வைத்திருந்தார். அந்த ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 42 ரன்களை விட்டுக் கொடுத்தார். எனினும், அந்த ஆட்டத்தில் ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரின் அதிரடியால் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது இங்கிலாந்து. இந்நிலையில், ஃபைனல் ஆட்டத்தில் தனது பெஸ்டை கொடுத்திருக்கிறார் சாம்.
இதுவரை நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் பெஸ்ட் வேகப்பந்து வீச்சாளர் என்ற ரெக்கார்டையும் தன்வசம் வைத்துள்ளார் சாம். டி20 உலகக் கோப்பை தொடர்களில் 12 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வேகப்பந்து வீச்சாளர் சாம் கர்ரன் மட்டுமே.
டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வேகப்பந்து பந்துவீச்சாளர்களில் இரண்டாவது வீரராகியுள்ளார் சாம். முதலிடத்தில் இலங்கை வீரர் ஹசரங்கா உள்ளார். அவர் 15 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.