ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 479 ரன்கள் எடுத்திருந்தப் போது டிக்ளேர் செய்தது. இதை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் மூன்றாம் நாளான இன்று இங்கிலாந்து அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது. டேவிட் மலான் மற்றும் ஜோ ரூட் நிதானமாக அடி வந்தனர். டேவிட் மலான் (80) ரன்களுக்கும், ஜோ ரூட் (62) ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்களில் ஸ்டோக்ஸ்(34) மற்றும் வோக்ஸ்(24) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி 237 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. அதில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 13 ரன்களுக்கு ரன் அவுட் ஆகினார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 282 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களுடம் மூன்றாவது நாளை முடித்துள்ளது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் ஜேம்ஸ் ஆண்டர்சென் பேட்டிங்கில் ஒரு சாதனையை படைத்துள்ளார். இன்றைய இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் ஆண்டர்சென் மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் இதுவரை 100 இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் இருந்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக இன்னிங்ஸில் நாட் அவுட்டாக இருந்த வீரர்கள்:
ஜேம்ஸ் ஆண்டர்சென்- 100* இன்னிங்ஸ்
கார்ட்னி வால்ஷ்-61 இன்னிங்ஸ்
முத்தையா முரளிதரன்-56 இன்னிங்ஸ்
பாப் வில்ஸ்-55 இன்னிங்ஸ்
கிறிஸ் மார்டின்-52 இன்னிங்ஸ்
இந்தப் பட்டியலில் ஜேம்ஸ் ஆண்டர்சென் மற்ற வீரர்களைவிட மிகவும் அதிகமான வித்தியாசத்தில் உள்ளார். அத்துடன் இப்பட்டியலில் முதல் 5 இடங்களில் அவர் ஒருவர் மட்டுமே தற்போது வரை விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ரங்கன் வாத்தியாரைப் பாராட்டிய அஸ்வின்.. ரிக்கி பாண்ட்டிங்கை புகழ காரணம் என்ன?