இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், வரும் உள்நாட்டு தொடருக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. 


முன்னதாக, இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், தன்னுடைய கேரியரை இப்போதைக்கு முடித்துக்கொள்ளும் எண்ணம் இல்லை என்று சில காலத்திற்கு முன்பு கூறியிருந்தார். இந்தநிலையில், தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆண்டர்சன் விரைவில் ஓய்வு பெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 


ஆண்டர்சனை ஓய்வு பெற சொன்னாரா மெக்கல்லம்..? 


இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம், ஜேம்ஸ் ஆண்டர்சனை தனிப்பட்ட முறையில் சந்தித்து இங்கிலாந்து டெஸ்ட் அணியின் எதிர்காலம் குறித்து பேசியுள்ளார். அப்போது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் தொடர் குறித்தும், இளம் வேகப்பந்து வீச்சாளர்களின் வருகை குறித்து பேசப்பட்டதாகவும் தெரிகிறது. 






இங்கிலாந்து டெஸ்ட் அணியை பொறுத்தவரை ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர். இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து டெஸ்ட்டில் பந்திவீசினால் டெஸ்ட் விளையாடும் எதிரணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்கள் மளமளவென விழுகும். இந்தநிலையில், ஆண்டர்சனை விட நான்கு வயது இளையவரான ஸ்டூவர்ட் பிராட், கடந்த ஆண்டு ஆஷஸ் டிராவுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால், ஜேம்ஸ் ஆண்டர்சன் இன்னும் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடி கொண்டிருக்கிறார். வருகின்ற 2025-26ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. அப்போது, ஆண்டர்சனுக்கு 43 வயது இருக்கும். எனவே, ஆண்டர்சனுக்கு பதிலாக இப்போதே அவரது இடத்தில், இங்கிலாந்து அணி ஒரு வேகப்பந்து வீச்சாளரை உருவாக்கி வைத்துகொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து அணியும், பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லமும் கருதுகின்றனர் போல..


இங்கிலாந்து அணி வருகின்ற ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக ஆறு டெஸ்ட் போட்டிகள் கொண்ட உள்ளூர் போட்டிகளில் விளையாடுகிறது. தி கார்டியன் செய்தியின்படி, ஜேம்ஸ் ஆண்டர்சனின் சொந்த மைதானமான ஓல்ட் ட்ராஃபோர்டில் இலங்கைக்கு எதிரான போட்டி நடைபெறவுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்த போட்டியுடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது ஓய்வை அறிவிக்கலாம். 


41 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த ஆண்டு இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகின் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன், இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களே 700 விக்கெட்களை எடுத்திருந்தனர். முத்தையா முரளிதரன் (800), ஷேன் வார்னே (708) ஆகியோர் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதன் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இந்தநிலையில், விவ்ரைவில் வார்னை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2003 ம் ஆண்டு ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி 194 ஒருநாள், 19 டி20 மற்றும் 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.