Stop Oil Protest: இங்கிலாந்தில் பரவலாக நடைபெற்று வரும் போராட்டங்களில் ‘ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் போராட்டம்’ தற்போது பெரும் கவனத்தினை பெற்றுள்ளது.  


இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி அங்கு ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் டெஸ்ட் போட்டி இன்று அதாவது ஜூன் மாதம் ஒன்றாம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, களமிறங்கிய அயர்லாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் ப்ராட் 4 விக்கெட்டுகளும் ஜேக் லீச் இரண்டு விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளனர். 


இந்த போட்டி குறிப்பிட்ட நேரப்படி தொடங்கப்படவில்லை. அதற்கு காரணம் இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும்  ‘ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் போராட்டம்’  தான். இந்த போராட்டக்காரர்களின் நோக்கம், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்களை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 






இந்நிலையில் இன்று லண்டனில் போராட்டம் நடத்தி இவர்கள் இங்கிலாந்து அணி லார்ட்ஸ் மைதானத்துக்கு சென்றுகொண்டு இருந்த பேருந்தை இடைமறித்து போராட்டத்தை நடத்தினர். அதன் பின்னர் காவலர்கள் வந்து அவர்களை அப்புறப்படுத்திய பின்னர் இங்கிலாந்து அணி மைதானத்துக்கு சென்றது. போராட்டக்காரர்களால், இடைமறிக்கப்பட்ட போது இங்கிலாந்து அணியின், பேட்ஸ்மேனும் விக்கெட் கீப்பருமான ஜானி போரிஸ்டோவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”நாங்கள் சற்று தாமதமாக வந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல” என போராட்டக்காரர்களின் புகைப்படத்துடன் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார். 


ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் போராட்டம்


ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் போராட்டக்காரர்கள் இதற்கு முன்னர்,  கடந்த வார இறுதியில் சரசன்ஸ் மற்றும் சேல் இடையே ட்விகன்ஹாமில் நடந்த கல்லாகர் பிரீமியர்ஷிப் இறுதிப் போட்டியையும் நடத்த முடியாமல் செய்தனர். அதாவது, ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் டி-ஷர்ட் அணிந்த இரண்டு ஆண்கள் முதல் பாதியின் நடுவே ஆடுகளத்தை ஆக்கிரமித்து, பாதுகாப்பு ஊழியர்களால் அகற்றப்படுவதற்கு முன்பு ஆரஞ்சு பெயிண்ட்டை மைதானத்தில் வீசினர்.






அதேபோல், கடந்த ஏப்ரலில் நடந்த உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியின் போது க்ரூசிபிளில் இதேபோன்ற சம்பவம் நடந்தது. ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் டி-ஷர்ட் அணிந்த ஒருவர் மேஜை ஒன்றின் மீது குதித்து, துணியின் மேல் ஆரஞ்சுப் பொடியைக் கொட்டியதால், ஜோ பெர்ரிக்கு எதிரான ராபர்ட் மில்கின்ஸ் போட்டி தடைபட்டது குறிப்பிடத்தக்கது.