இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையே ஹைதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றியுடன் தொடங்கியது. 


இதையடுத்து, விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி தொடரை 1-1 என சமன் செய்தது. இந்தநிலையில், கிட்டத்தட்ட 8 நாட்கள் இடைவெளிக்கு பிறகு தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இரு அணிகளும் களமிறங்கியுள்ளன. இந்த டெஸ்ட் போட்டியில் ஒரு சிறப்பு என்னவென்றால் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸின் கேரியரின் 100வது டெஸ்ட் போட்டி இதுவாகும். 






100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 16வது இங்கிலாந்து வீரர்:


இங்கிலாந்து அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடப்போகும் 16வது வீரர் என்ற பெருமையை பென் ஸ்டோக்ஸ் பெறவுள்ளார். இதுவரை இங்கிலாந்து அணிக்காக 713 வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளனர். அதில், இதுவரை 15 வீரர்கள் மட்டுமே இங்கிலாந்து அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது பென் ஸ்டோக்ஸ் இணையவுள்ளார். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 184 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக ஸ்டூவர்ட் பிராட் (167), இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டர் குக் (161), ஜோ ரூட் (137), அலெக் ஸ்டீவர்ட் (133), இயான் பெல் (118), கிரஹாம் கூச் (118), டேவிட் கோவர் (117), மைக்கேல் அதர்டன் (115), மைக்கேல் கவுட்ரே (114), ஜெஃப்ரொ பாய்காட் (108), கெவின் பீட்டர்சன் (104), இயன் போத்தம் (102), ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் (100), கிரஹாம் தோர்ப் (100) ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர். 


பென் ஸ்டோக்ஸின் டெஸ்ட் வாழ்க்கை:


கடந்த 2023ம் ஆண்டு அடிலெய்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் பென் ஸ்டோக்ஸ். சரியாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்டோக்ஸ் தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடி சாதனை படைக்க இருக்கிறார். இதுவரை விளையாடிய 99 டெஸ்ட் போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் 179 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 36.34 சராசரியுடன் 6251 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 13 சதங்களும், 31 அரை சதங்களும் அடங்கும். 258 என்பதே அவரது டெஸ்ட் வாழ்க்கையில் சிறந்த ஸ்கோராகும். 


பந்துவீச்சு: 


அதேபோல், பென் ஸ்டோக்ஸ் 146 இன்னிங்ஸ்களில் பந்துவீசி 197 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். பந்துவீச்சில் 22 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தியதே இவரது சிறந்த பந்துவீச்சாகும். 


பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்களை வீழ்த்த இன்னும் 3 விக்கெட்கள் மட்டுமே தேவையாக உள்ளது. இதையடுத்து, பென் ஸ்டோக்ஸ் தனது 100வது டெஸ்டில் தனது 200 டெஸ்ட் விக்கெட்களை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய நாளில் பென் ஸ்டோக்ஸ் பந்துவீசி பயிற்சி மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.