தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்க அணியும் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து நாட்டில் உள்ள செஸ்டர்லீஸ்ட்ரீட்டில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் கேஷவ் மகாராஜ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி, பேட்டிங்கைத் தொடங்கிய குயின்டின் டிகாக் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின்னர். ஜோடி சேர்ந்த மலான் – வான்டர்டுசென் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இதனால், தென்னாப்பிரிக்காவின் ரன் விகிதம் சீராக ஏறியது. அணியின் ஸ்கோர் 144 ரன்களை எட்டியபோது தொடக்க வீரர் மலான் அவுட்டானார். அவர் 77 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர். வான்டர் டுசென்னுடன் மார்க்ரம் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் இணைந்து அதிரடியாக ஆடினர். குறிப்பாக, டுசென் சற்று நிதானமாக ஆட மார்க்ரம் அதிரடி காட்டினார். அதிரடியாக ஆடிய மார்க்ரம் அரைசதம் கடந்தார். அரைசதம் கடந்த சிறிது நேரத்தில் மார்க்ரம் 61 பந்தில் 9 பவுண்டரியுடன் 77 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். பின்னர், களமிறங்கிய டேவிட்மில்லர் அதிரடி காட்ட மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய வான்டர்டுசென் சதம் அடித்து விளாசினார்.

சதமடித்த பிறகு அவர் விறுவிறுவென்று ரன்களை சேர்த்தார். தென்னாப்பிரிக்க அணி 300 ரன்களை நெருங்கியபோது வான்டர் டுசன் அவுட்டானார். அவர் 117 பந்தில் 10 பவுண்டரியுடன் 133 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 50 ஓவர்களின் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்களை விளாசியது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு இந்த போட்டியில் படுமோசமாக இருந்தது என்றே கூறலாம்.

பகுதிநேர பந்துவீச்சாளர் லிவிங்ஸ்டன் மட்டுமே 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட் வீழ்த்தினார். இன்று தனது கடைசி ஒருநாள் போட்டியில் ஆடும் பென்ஸ்டோக்ஸ் 5 ஓவர்கள் மட்டுமே வீசினார். ஆனால், அவரது பந்துவீச்சில் 44 ரன்கள் விளாசப்பட்டது. சாம்கரன் அதிகபட்சமாக 10 ஓவர்கள் வீசி 67 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

இன்று தனது கடைசி ஒருநாள் போட்டியில் ஆடும் பென்ஸ்டோக்சை இங்கிலாந்து வீரர்கள் வெற்றியுடன் வழியனுப்புவார்களா? இல்லையா:? என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.