2023ஆம் ஆண்டு இந்தியாவில் ஐசிசி நடத்தி வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் முடிவினை எட்டும் தருவாயில் உள்ளது. இதில் அட்டவணைப்படி களமிறங்கிய 10 அணிகளும் மற்ற அணிகளுடன் தல ஒரு முறை மோதியது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதன் அடிப்படையில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுவிட்டது. நியூசிலாந்து அணியும் தனது அரையிறுதியை உறுதி செய்துள்ளதால், இந்த தொடரின் கடைசி 4 லீக் போட்டிகள் அட்டவணைப்படி நடத்தப்படுகின்றன. இன்றைய போட்டிகளில் இங்கிலாந்து பாகிஸ்தான் போட்டி முடிந்ததும், நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக அரையிறுதிக்கு முன்னேறும். ஒருவேளை இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் கிட்டத்தட்ட 300 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் அரையிறுதிக்கு முன்னேற முடியும் அல்லது இங்கிலாந்து நிர்ணயிக்கும் இலக்கை 2.3 ஓவர்களில் பாகிஸ்தான் எட்டினால் அரையிறுதிக்கு ரன்ரேட் அடிப்படையில் தகுதி பெறும் எனும் நிலையில் இருந்தது.  முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் சேர்த்தது.

  


இங்கிலாந்து அணி நிர்ணயம் செய்த இலக்கினை பாகிஸ்தான் அணி 6.2 ஓவர்களில் எட்டினால் ரன்ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பினைப் பெறும். ஆனால் 6.2 ஓவர்களில் 338 ரன்கள் என்ற இலக்கை எட்டுவது கிரிக்கெட் வரலாற்றில் எப்போதும் சாத்தியமில்லை என்பதால், பாகிஸ்தான் அணி அதிகாரப்பூர்வமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியது. அதேபோல் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 


தொடரை வெற்றியுடன் முடிக்கவேண்டும் எனும் நோக்கில் பாகிஸ்தான் வீரர்கள் பொறுப்புடன் விளையாடுவார்கள் என எதிர்பார்த்தது கிரிக்கெட் ரசிகர்களின் தவறு மட்டும் அல்ல, பாகிஸ்தான் ரசிகர்களின் தவறு என யோசிக்கும் அளவிற்கு, பாகிஸ்தானின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விளையாடினர். ஆனால் இங்கிலாந்து தரப்பில் பவுலர்கள் தொடங்கி ஃபீல்டர்கள் வரை அனைவரும் சிறப்பாக விளையாடினர். இதனால் பாகிஸ்தான் அணி தொடக்கம் முதல் நெருக்கடியை சந்தித்தது. 


பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சல்மான் மட்டும் 51 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை டேவிட் வில்லி பந்தில் இழந்தார். டேவிட் வில்லிக்கு இந்த போட்டி சர்வதேச அளவில் கடைசி போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. சல்மான் விக்கெட்டுடன் சேர்த்து மொத்தம் 3 விக்கெட்டுகள் கைப்பற்றியதால், ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். 


இங்கிலாந்து அணியின் அட்டாக் பந்து வீச்சினை தாக்கு பிடிக்க முடியாமல் திணறி வந்த பாகிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். ஆனால் 10வது விக்கெட்டுக்கு இணைந்த ஹாரீஸ் ராஃப் மற்றும் முகமது வசீம் கூட்டணி வானவேடிக்கை காட்டினர். இருவரும் இங்கிலாந்து அணியின் டாப் பவுலர்களை சிதறடித்தனர். இருவரும் மாறி மாறி சிக்ஸர்களும் பவுண்டரிகளும் விளாச மைதானம் கொஞ்ச நேரம் ஆரவாரமாக இருந்தது. இறுதியில் பாகிஸ்தான் அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டினைட்யும் இழந்து 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி ரன்கள் 93 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் இங்கிலாந்து அணி 9 லீக் போட்டிகளில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.