2023ஆம் ஆண்டு இந்தியாவில் ஐசிசி நடத்தி வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் முடிவினை எட்டும் தருவாயில் உள்ளது. இதில் அட்டவணைப்படி களமிறங்கிய 10 அணிகளும் மற்ற அணிகளுடன் தல ஒரு முறை மோதியது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதன் அடிப்படையில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுவிட்டது. நியூசிலாந்து அணியும் தனது அரையிறுதியை உறுதி செய்துள்ளதால், இந்த தொடரின் கடைசி 4 லீக் போட்டிகள் அட்டவணைப்படி நடத்தப்படுகின்றன. இன்றைய போட்டிகளில் இங்கிலாந்து பாகிஸ்தான் போட்டி முடிந்ததும், நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக அரையிறுதிக்கு முன்னேறும். ஒருவேளை இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் கிட்டத்தட்ட 300 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் அரையிறுதிக்கு முன்னேற முடியும் அல்லது இங்கிலாந்து நிர்ணயிக்கும் இலக்கை 2.3 ஓவர்களில் பாகிஸ்தான் எட்டினால் அரையிறுதிக்கு ரன்ரேட் அடிப்படையில் தகுதி பெறும் எனும் நிலையில் இருந்தது.
இப்படியான நிலையில் கொல்கத்தாவில் உள்ள புகழ் பெற்ற மைதானமான ஈடன் கார்டன் மைதானத்தில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சினை சிதறடித்தது. முதல் 10 ஓவர்களில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தினை கொடுத்தது. 82 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த கூட்டணி பிரிந்தது.
அதன் பின்னர் தொடக்க ஆட்டக்கார பேர்ஸ்டோவ் தனது விக்கெட்டினை அரைசதம் கடந்து 59 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். ஆனால் அதன் பின்னர் இணைந்த ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் கூட்டணி இங்கிலாந்து அணியை மிகவும் வலுவான நிலைக்கு கொண்டு சென்றது. குறிப்பாக ஸ்டோக்ஸ் அதிரடியாக பவுண்டரிகள் விளாச, ரூட் நிதானமாக விளையாடிவந்தார். இதனால் இவர்களை எளிதில் பிரிக்க முடியவில்லை. பாகிஸ்தான் அணியின் அனைத்து பந்து வீச்சாளர்களையும் (அஃப்ரிடியைத் தவிர) கேப்டம் பாபர் அசாம் பயன்படுத்தி பார்த்தும் பலன் கிடைக்கவில்லை. இருவரும் அரைசதத்தினை பூர்த்தி செய்த நிலையில் சிறப்பாக விளையாடி வந்தனர். இவர்கள் கூட்டணியை 41 வது ஓவரை வீசிய அஃப்ரிடி பிரித்தார். அதிரடியாக விளையாடி வந்த ஸ்டோக்ஸ் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையிஒல் 84 ரன்கள் சேர்த்த நிலையில் அஃப்ரிடி வீசிய யார்க்கர் பந்தில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். 43வது ஓவரில் அரைசதம் கடந்த ரூட் தனது விக்கெட்டினை அஃப்ரிடி பந்தில் வெளியேறியது மட்டும் பாகிஸ்தானுக்கு ஆறுதல் அளிப்பதாக அமைந்தது.
இதற்கடுத்து இணைந்த கேப்டன் பட்லர் மற்றும் ஹாரி ப்ரூக் கிடைத்த பந்துகளை சிக்ஸருக்கு விளாசுவதிலும், லாவகமான பந்துகளை பவுண்டரிக்கு விளாசுவதிலும் தீவிரமாக இருந்தனர். இதனால் இங்கிலாந்து அணியின் ரன்ரேட் குறையாமல் சீராக முன்னேறிவந்தது. இறுதியில் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, ரன் வேட்டை குறைந்தது. இதனால் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் சேர்த்தது.