இந்தியாவில் நடைபெற்று வரும் 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் களமிறங்கிய இந்த தொடரில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும்  அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இப்படியான நிலையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தது. நான்கவது அணி நியூசிலாந்தா அல்லது பாகிஸ்தானா என்ற கேள்விக்கு நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளின் கடைசி லீக் போட்டியினை மைய்யப்படுத்தி முடிவு எடுக்கப்படும் என்ற நிலையில் இருந்தது. 


இதில் நியூசிலாந்து அணி தனது கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடனும், ரன்ரேட்டில் +0.743ஆகவும் உள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறவேண்டும் என்றால் தனது கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்து நிர்ணயம் செய்த இலக்கினை (338 ரன்கள்) 6.2 ஓவர்களில் எட்டவேண்டும். கிரிக்கெட் வரலாற்றிலேயே இப்படியான சேஸிங் என்பது சாத்தியமற்றது என்றாலும், பாகிஸ்தான் அணி 6.2 ஓவர்கள் பேட்டிங் செய்த பின்னர் நியூசிலாந்து அணி அதிரப்பூர்வமாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளதாக ஐசிசி அட்டவணைப்படுத்தியுள்ளது. 


இதனால் நியூசிலாந்து அணி வரும் 15ஆம் தேதி அதாவது புதன்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளும் ஏற்கனவே லீக் சுற்றில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடனான போட்டியில் தோல்வியைத் தழுவி வெளியேறியது குறிப்பிடத்தக்கது. 


2023 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து கடந்து வந்த பாதை


நடப்பு  உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்து அணி மொத்தம் 9 லீக் போட்டிகளில் விளையாடி அதில், 5 போட்டிகளில் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. இந்த தொடரினை தொடங்கும்போது நியூசிலாந்து அணி தனது முதல் 4 போட்டிகளில் வெற்றி பெற்றது. ஆனால் அதன் பின்னர் விளையாடிய 4 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியைத் தழுவியது. அதேபோல் தனது கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தினை எட்டியது.