சர்வதேச டி20 போட்டியில் 3000 ரன்களை கடந்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பாபர் அசாம் படைத்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தானுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே நடந்த ஐந்து டி20 போட்டிகளில் பாகிஸ்தான் மூன்றில் வெற்றி பெற்று 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்த நிலையில், இரு அணிகளும் மோதிய ஆறாவது டி20 போட்டி நேற்று லாகூர் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மொயின் அலி, பாகிஸ்தான் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி, பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் விக்கெட் கீப்பர் முகமது ஹாரிஸ் களமிறங்கினர். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய ரிஸ்வான் நேற்றைய போட்டியில் ஆடவில்லை.
இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி 62 ரன்களுக்குளு அடுத்தடுத்து 3 விக்கெட்களை இழந்தது. ஒருபுறம் நங்கூரம் போல் நின்ற கேப்டன் பாபர் அசாம் பாகிஸ்தான் அணிக்காக ரன் எடுக்க போராட்டி வந்தார். அடுத்து வந்த இப்திகார் அகமது ஓரளவு தாக்குபிடித்து ஆடி 31 ரன்கள் குவித்து அவுட் ஆக, நிதானமாக ரன் சேர்த்த கேப்டன் பாபர் அசாம் 41 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். டி20 அரங்கில் இது இவருக்கு 27வது அரைசதமாகும்.
மேலும், பாபர் அசாம் 52 ரன்கள் குவித்தபோது சர்வதேச டி20 போட்டியில் 3000 ரன்களை கடந்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றார். அதேபோல், 81 இன்னிங்ஸில் 3000 ரன்களை அடித்து பாபர் அசாம் விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார். முன்னதாக இந்திய வீரர் விராட் கோலியும் 81 இன்னிங்ஸில் 3000 ரன்களை அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி மற்றும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆகிய இருவர் மட்டுமே 100 இன்னிங்ஸ்களில் 3,000 ரன்களை எட்டியவர்கள்.
சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய ஜோடிகளான ரோஹித் சர்மா (140 போட்டிகளில் 3,694 ரன்கள்), கோஹ்லி (108 போட்டிகளில் 3,663), நியூசிலாந்தின் மார்ட்டின் கப்டில் (112 போட்டிகளில் 3,497), அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் (114 போட்டிகளில் 3,0411 ) ஆகியோருடன் பாபர் அசாமும் இணைந்தார். இதன்மூலம் 3,000 ரன்கள் எடுத்த ஐந்தாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையும், 3000 ரன்களை கடந்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
பெண்கள் டி20 போட்டிகளில், சுசி பேட்ஸ், மெக் லானிங் மற்றும் ஸ்டாபானி டெய்லர் ஆகியோர் 3000 ரன்களுக்கு மேல் உள்ளனர். ஒட்டுமொத்தமாக, டி20 போட்டிகளில் சாதனை படைத்த எட்டாவது வீரர் பாபர் ஆவார்.