இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி முல்தான் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி கம்ரான் குலாமின் அபார சதத்தால் 366 ரன்களை எடுத்தது. இதையடுத்து, முதல் இன்னிங்சைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்காக ஜாக் கிராவ்லி 27 ரன்களில் அவுட்டானாலும், பென் டக்கெட் 114 ரன்கள் எடுத்தார்.


சிரித்த ஜோ ரூட்: 


இந்த போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த சூழலில் அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், டக்கெட்டை பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் சஜித்கான் வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.


இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் களமிறங்கியபோது, அவரிடம் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சஜித்கான் “ நான் உங்கள் சகோதரருக்கு எதிராக விளையாடியுள்ளேன். உங்கள் விக்கெட்டை வீழ்த்துவது எனது கனவு” என்று கூறியுள்ளார். அதற்கு ஜோ ரூட் சிரிக்கத் தொடங்கியுள்ளார்.







பாடம் புகட்டிய பாகிஸ்தான் பந்துவீச்சாளர்:


ஆனால், நேற்றைய போட்டியில் ஜோ ரூட் சஜித்கானின் பந்தில் போல்டானார். ஜோ ரூட் 54 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நேற்றைய போட்டி முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து அணி 127 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. ஜேமி ஸ்மித் – கார்ஸ் களத்தில் உள்ளனர்.


31 வயதான சஜித்கான் நீண்ட இடைவேளைக்கு பிறகு பாகிஸ்தான் அணியில் களமிறங்கியுள்ளார். இங்கிலாந்து அணியை திணறடித்து வரும் சஜித்கான், இந்த இடத்திற்கு வருவதற்கு நான் ஏராளமான இன்னல்களை கடந்து வந்துள்ளேன். இப்போது பாகிஸ்தான் அணிக்காக நட்சத்திரங்களை நெஞ்சில் சுமந்து ஆடி வருகிறேன். எனது தந்தை பாகிஸ்தான் ராணுவ வீரர். நான் பாகிஸதான் நட்சத்திரங்களை நெஞ்சில் சுமந்துள்ளேன். எனது ஆர்வமும், சக்தியும் இந்த நட்சத்திரத்தில் இருந்து வருகிறது. அல்லாஹ் எனக்கு இந்த மரியாதையை தந்துள்ளார்.”


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


இங்கிலாந்தின் 6 விக்கெட்டுகளையும், சஜித்கானும், நோமன் அலியும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.