இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 257 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது.
கடந்த ஆண்டு இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றன. இதில் நாட்டிங்ஹமில் நடைபெற்ற முதல் போட்டி சமனில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற நான்காவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. ஐந்தாவது போட்டி கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது நடைபெற்று வருகிறது.
கடந்த ஜூலை 1 ஆம் தேதி இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் நகரில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென்ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக கூறினார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் துணை கேப்டன் ரிஷப் பண்ட் 146 ரன்கள், ஜடேஜா 104, கேப்டன் பும்ரா 31 ரன்கள் விளாச முதல் இன்னிங்ஸில் அந்த அணி 416 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 84 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. இதனையடுத்து போட்டியின் மூன்றாவது நாளான நேற்று இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் மூலம் இந்தியாவை விட இங்கிலாந்து 132 ரன்கள் பின்தங்கியுள்ளது. முன்னதாக, இரண்டாம் நாள் ஸ்கோருடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஜானி பார்ஸ்டோ – பென்ஸ்டோக்ஸ் ஜோடி மிகவும் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர்.
கேப்டன் பென்ஸ்டோக்ஸ் 25 ரன்களில் ஆட்டமிழக்க, சிறப்பாக ஆடிய ஜானி பார்ஸ்டோ தனது 11வது டெஸ்ட் சதத்தை விளாசினார். இந்த ஆண்டில் மட்டும் அவர் விளாசும் 5வது சதம் இதுவாகும். இந்திய அணி தரப்பில் சிறப்பாக சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர் புஜாரா சிறப்பாக ஆடி அரைசதம் விளாசினார். மறுமுனையில் கில் 4, ஹனுமன் விஹாரி 11, விராட் கோலி 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இந்திய அணி 257 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது. இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற சவாலான இலக்கை இந்திய அணி நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்