உலகப் புகழ்பெற்ற பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் நேற்று தொடங்கியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இரண்டாவது இன்னிங்சை ஆஸ்திரேலிய அணி தொடங்கியது. ஆஸ்திரேலியாவின் ஆட்டத்தை அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னரும், மார்கஸ் ஹாரிசும் ஆட்டத்தை தொடங்கினர்.
ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் முதல் விக்கெட்டாக மார்கஸ் ஹாரிஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் டேவிட் வார்னர் போல்டாகினார். அப்போது, வார்னர் 17 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். வார்னர் களத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, மூன்றாவது நடுவர் மீண்டும் டி.வி. ரீப்ளேயில் பார்த்தார். அப்போது, பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்து நோ பால் என்பது கண்டறியப்பட்டு, டேவிட் வார்னருக்கு நாட் அவுட் தரப்பட்டது.
பின்னர், பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்துகளை ஆய்வு செய்தபோது ஆட்டத்தின் இரண்டாவது நாளான இன்று, முதல் செஷனில் மட்டுமே பென் ஸ்டோக்ஸ் மொத்தம் 14 பந்துகளை நோ பாலாக வீசியிருந்தது கண்டறியப்பட்டது. போட்டியின்போது சில நேரங்களில் கள நடுவர்களால் நோ பால்களை கண்டறிய முடியாமல் போவது இயல்பான ஒன்றே ஆகும். இதனால், பந்துவீச்சாளர்கள் நோ பால் வீசியிருந்தாலும் சில சமயங்களில் தப்பி விடுவார்கள்.
ஆனால், நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் பென் ஸ்டோக்ஸ் 14 நோ பால்களை வீசியிருப்பது கண்டறியப்பட்டது. அவற்றில் அம்பயரால் 3 பந்துகள் மட்டுமே நோ பாலாக அறிவிக்கப்பட்டிருந்தது. நவீன தொழில்நுட்பங்கள் இருந்தும் வீரர்கள் நோ பால் வீசுவது கண்டறியப்படாமல் இருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போட்டியில் இதுவரை பென் ஸ்டோக்ஸ் 9 ஓவர்கள் வீசி 50 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு, கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பியுள்ள பென் ஸ்டோக்ஸ் முதல் இன்னிங்சிலும் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் தற்போது ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 343 ரன்கள் குவித்து 196 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 112 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக டேவிட் வார்னர் 94 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்