வளர்ந்து வரும் அணிகள் ஆசியக்கோப்பை 2023 தொடரின் இறுதிப் போட்டி தற்போது கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த இறுதிப் போட்டியில் இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
முதலில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக சைம் அயூப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோர் களமிறங்கி சிறப்பான தொடக்கம் தந்தனர்.
இருவரும் ஆரம்பம் முதலே தேவைப்படும் நேரத்தில் பவுண்டரிகளை பறக்கவிட்டு, அரைசதம் கடந்து அசத்தினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 121 ரன்கள் குவித்தது. 51 பந்துகளில் 59 ரன்களை குவித்த சைம், மானவ் சுதர் பந்தில் துருவ் ஜூரலிடம் கேட்சாகி அவுட்டானார்.
28வது ஓவரின் இரண்டாவது பந்தில், ரியான் பராக், உமைர் யூசுப்பை 35 ரன்களுக்கு ஒரு சிறப்பான கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க செய்தார். இது போதாதென்று, அடுத்த பந்திலேயே காசிம் அக்ரமை வெளியேற்றி அசத்தினார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
அதன் பிறகு தயாஃப் தாகிர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை கதிகலங்க வைத்தார். தயாஃப் 71 பந்துகளில் 12 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உதவியுடன் 108 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்த அதிரடி ஆட்டத்தின்மூலம், பாகிஸ்தான் ஏ அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
இவருக்கு பிறகு பின் வரிசைகள் வீரர்கள் யாரும் ஜொலிக்காத நிலையிலும், பாகிஸ்தான் அணி 300 ஐ கடந்து அசத்தியது.
50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் ஏ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது.
இந்திய அணி விவரம்:
சாய் சுதர்சன், அபிஷேக் சர்மா, நிகின் ஜோஸ், யாஷ் துல் (கேப்டன்), ரியான் பராக், நிஷாந்த் சிந்து, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), மானவ் சுதர், ஹர்ஷித் ராணா, ஆர்எஸ் ஹங்கர்கேகர், யுவராஜ்சிங் தோடியா
பாகிஸ்தான் அணி விவரம்:
சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், உமைர் யூசுப், தயப் தாஹிர், காசிம் அக்ரம், முகமது ஹாரிஸ் (கேப்டன்& விக்கெட் கீப்பர்), முபாசிர் கான், மெஹ்ரான் மும்தாஜ், முகமது வாசிம் ஜூனியர், அர்ஷத் இக்பால், சுஃபியான் முகீம்