Virat Kohli:  ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் விராட் கோலி ஆட்டமிழந்தை அடுத்து ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 


இந்திய அணி திணறல்


ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி, பிர்ஸ்பேன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 445 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 22 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.



சொதப்பிய கோலி


தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஷ்வால் வெறும் 4 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து வந்த கில் ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார். முதல் டெஸ்டில் சதமடித்து அசத்திய கோலி, இரண்டாவது டெஸ்டில் பேட்டிங்கில் சொதப்பினார். இதனால், இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 3 ரன்களுக்கு ஹேசல்வுட் பந்துவீச்சில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. குறிப்பாக நீண்டகாலமாகவே ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் பந்தை அடிக்க முயன்று விக்கெட்டை பறிகொடுப்பது கோலியின் பலவீனமாக உள்ளது. இன்றும் அதே பாணியில் கோலி ஆட்டமிழந்தது ரசிகர்களை கோபமடைய செய்தது.











”வீட்டுக்கு கிளம்புங்க கோலி”


பலவீனம் என்பதை தெரிந்தும் அதே ஷாட்டை ஆட முயன்று அணியை இக்காட்டான நிலையில் கோலி சிக்கவைத்துள்ளார் என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஒரே மாதிரியான பந்தில் எத்தனை முறை தான் விக்கெட்டை பறிகொடுப்பீர்கள்? உங்களுக்கான காலம் முடிந்துவிட்டது என தெரிந்தால், ஓய்வை அறிவித்துவிட்டு வீட்டிற்கு கிளம்புங்கள்? தோனியிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள், இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுங்கள், திறமையான இளைஞர்கள் பலர் கோலி மற்றும் ரோகித்தால் வாய்ப்பை இழக்கின்றனர் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.