இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர்களான சுப்மன்கில், ஜெய்ஸ்வால், ரிஷப்பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டவர்களும், வளர்ந்து வரும் இளம் வீரர்களும் பங்கேற்றுள்ள துலீப் டிராபி நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா ஏ – இந்தியா பி அணிகளுக்கு இடையேயான போட்டி சுவாரஸ்யமாக நடைபெற்று வருகிறது.


முதலில் பேட் செய்து வரும் இந்திய பி அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 30 ரன்களுக்கும், கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 13 ரன்களுக்கும் அவுட்டாக, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சர்ப்ராஸ் கான் 9 ரன்களுக்கும், அதிரடி வீரர் ரிஷப்பண்ட் 7 ரன்களுக்கும் அவுட்டாகினர்.


94 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் விழுந்த நிலையில் நவ்தீப் சைனியை மறுமுனையில் வைத்துக்கொண்டு தனி ஆளாக சர்ப்ராஸ் கானின் தம்பி முஷீர்கான் போராடினார். ஒன் டவுன் வீரராக களமிறங்கிய அவர் தனி ஆளாக பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி தத்தளித்துக் கொண்டிருந்த இந்தியா பி அணியை மீட்டார்,






அரைசதத்தை கடந்தும் அபாரமாக ஆடிய அவர் தனது சிறப்பான பேட்டிங் மூலம் சதம் விளாசினார். மிகவும் நெருக்கடியான நேரத்தில் அபாரமாக ஆடி முஷீர்கான் சதம் விளாசி அணியை மீட்டதை, பெவிலியனில் நின்று கொண்டிருந்த அவரது அண்ணன் சர்ப்ராஸ் கான் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா பி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்திருந்தது. முஷீர்கான் 227 பந்துகளில் 10 பவுண்டரி 2 சிக்ஸருடன் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். நவ்தீப் சைனி 74 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். 19 வயதே ஆன முஷீர்கான் கடந்தாண்டு நடைபெற்று முடிந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையிலும் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி சதம் விளாசியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் முஷீர்கானுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டிசம்பர் மாதம் நடைபெறும் ஐ.பி.எல். ஏலத்திலும் அவர் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.