Ravindra Jadeja Joins BJP: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஜடேஜா பாஜக கட்சியில் இணைந்தார். கட்சியில் உறுப்பினராக இணைந்துள்ள அடையாள எண் புகைப்படத்தை , அவரது மனைவி ரிவாபா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
#SadasyataAbhiyaan2024 pic.twitter.com/he0QhsimNK
— Rivaba Ravindrasinh Jadeja (@Rivaba4BJP) September 2, 2024
பாஜகவில் இணைந்த ஜடேஜா:
இந்திய கிரிக்கெட் வீரரும், சி.எஸ்.கே வீரருமான ரவீந்திர ஜடேஜா பாஜக கட்சியில் இணைந்துள்ளார். ஜடேஜா தற்போது நடைபெற்று வரும் பாஜக உறுப்பினர் சேக்கையின் போது கட்சியில் இணைந்துள்ளார். அவரது மனைவி ரிவாபா ஜடேஜாவும் பாஜக எம்எல்ஏ-வுமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக-வில் இணைந்த தகவலை ரிவாபா சமூக ஊடக தளமான X இல் பகிர்ந்துள்ளார். அவர் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் உறுப்பினர் அட்டைகளையும் இணைத்து பதிவிட்டுள்ளார்.
வீட்டிலிருந்து உறுப்பினர் சேர்க்கை:
எம்.எல்.ஏ ரிவாபா செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரத்தை எனது வீட்டிலிருந்து தொடங்கியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
இவர் 2019 இல் பாஜகவில் இணைந்ததையடுத்து,2022 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் ஜாம்நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். தேர்தல் பரப்புரையின்போது, ரவீந்திர ஜடேஜாவும் அவருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது இருந்தே , ஜடேஜா பாஜக கட்சியில் இணையவுள்ளார் என்ற தகவல் பரவி வந்தது. இந்நிலையில், தற்போது பாஜகவில் இணைந்த தகவலை அவரது மனைவி பகிர்ந்துள்ளார்.
அவர் பகிர்ந்த பதிவில், அவரது பாஜக உறுப்பினர் அட்டையையும், ஜடேஜா உறுப்பினர் அட்டையையும் இணைத்துள்ளார். அந்த அட்டையில் உறுப்பினர் எண், பெயர், புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
பாஜக வேட்பாளரா?
இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக திகழும் ஜடேஜா, இந்திய அணிக்கு பல்வேறு முக்கிய தருணங்களிலும், சிரமமான தருணங்களிலும் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகவே இருந்தது என்றே சொல்லலாம். சமீபத்தில் உலகக் கோப்பை போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், தற்போது பாஜகவில் இணைந்துள்ளது , பாஜக சார்பில் போட்டியிட தயாராகுகிறாரா என்ற கோணத்தில் கேள்வி எழுவதை பார்க்க முடிகிறது.