இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்பான சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஹர்பஜன் சிங். இவர் இந்திய அணியில் 1998ம் ஆண்டு முதல் முறையாக களமிறங்கினார். அதன்பின்னர் இந்திய அணிக்காக பல முறை சிறப்பாக பந்துவீசி அசத்தியவர். கடைசியாக அவர் 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். அதன்பின்பு அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. 


இந்நிலையில், ஹர்பஜன் சிங் அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.  அதனை தொடர்ந்து ஹர்பஜனுக்கு இன்னாள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி, டிசம்பர் 26-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில், மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்த கேப்டன் விராட் கோலி, புஜாரா, பயிற்சியாளர் டிராவிட் ஆகியோர் ஹர்பஜனுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது. இந்த வீடியோ இப்போது கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 


"மொஹாலியில் 18 வயது இளம் கிரிக்கெட் வீரராக அவரை பார்த்த ஞாபகம். அசாத்தியமான கிரிக்கெட் கரியர் கொண்ட ஹர்பஜனுக்கு வாழ்த்துகள். அவரை பார்க்கும்போதே, அவர் திறமையானவர் என்பது தெரியும். ஆனால், அதை நிரூபித்தும் காட்டியிருக்கிறார் அவர். ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், சவாலான காலக்கட்டங்களிலும் அதில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். அணிக்காக விளையாடிய சிறந்த வீரர். அவரோடு விளையாடியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவருடைய புது பயணத்திற்கு எனது வாழ்த்துகள்” என டிராவிட் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 


மேலும் படிக்க: Minnal Murali | `மின்னல் முரளி’: கேரள மண்ணில் இருந்து ஒரு சூப்பர்ஹீரோ.. எப்படி இருக்கிறான் மின்னல் முரளி?






இந்திய டெஸ்ட் கேப்டன் கோலி பேசும்போது, “பாஜிப்பா, உங்களது சிறப்பான கிரிக்கெட் பயணத்திற்கு வாழ்த்துகள். 711 விக்கெட்டுகள் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல. அதை நினைத்து நீங்கள் எப்போதும் பெருமை கொள்ளலாம். நிறைய மகிழ்ச்சியும், அமைதியும், குடும்பத்துடன் செலவழிக்க அதிக நேரமும் கிடைக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்” என தெரிவித்திருக்கிறார். 


இன்னும் பல கிரிக்கெட் வீரர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வந்தாலும், சச்சின் டெண்டுல்கர் ஹர்பஜனுக்காக சிறப்பான வாழ்த்துகளை பதிவிட்டிருக்கிறார். ”முதன் முதலில் நெட் பயிற்சியில்தான் உங்களை சந்தித்தேன். அப்போது இருந்து கிரிக்கெட்டிலும் சரி, வெளியிலும் சரி உங்களுடனான நினைவுகள் என்றைக்கும் மனதில் இருக்கக்கூடியவை. எங்கு இருந்தாலும், உங்களால் ஏற்படும் சிரிப்பை மறக்க மாட்டேன். இந்திய அணிக்காக நீங்க விளையாடியதை எண்ணி நாங்கள் அனைவரும் பெருமிதம் அடைகிறோம். வாழ்த்துகள் பாஜி” என தெரிவித்திருக்கிறார். 






கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் இந்திய அணியில் விளையாடிய ஹர்பஜன் சிங் 103 டெஸ்ட் போட்டிகள், 236 ஒருநாள் போட்டிகள் மற்றும் 28 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதில் டெஸ்டில் 417 விக்கெட்களையும், ஒருநாள் போட்டியில் 269 விக்கெட்களையும் மற்றும் டி20 போட்டிகளில் 25 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.  டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர்கள் வரிசையில் ஹர்பஜன் சிங் நான்காவது இடத்தில் உள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண