இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்குகிறது. தென்னாப்பிரிக்காவில் தற்போது ஓமிக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ளதால் இந்தத் தொடருக்கு மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை. ஆகவே இந்த முறை எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற முனைபைப்பில் இந்திய அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எந்தெந்த வீரர்களை தேர்வு செய்வார்கள் என்ற குழப்பம் அதிகமாக உள்ளது. குறிப்பாக இந்திய அணியின் மிடில் ஆர்டர் மிகவும் மோசமாக உள்ளது. இந்தியாவில் நடைபெற்ற நியூசிலாந்து தொடரிலும் இந்திய மிடில் ஆர்டர் வீரர்கள் சரியாக ஆடவில்லை. குறிப்பாக புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் மிகவும் மோசமான ஃபார்மில் உள்ளனர். ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பான ஃபார்மில் உள்ளார். ஏற்கெனவே இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ஜடேஜா இல்லாததால் பேட்டிங் சற்று பலவீனமாக இருக்கும். 

எனவே மிடில் ஆர்டர் வீரர்கள் நிச்சயம் இந்தத் தொடரில் சரியாக ஆட வேண்டும். இந்தச் சூழலில் இந்திய அணியின் முன்னாள் வாசிம் ஜாஃபர் இந்திய அணி தேர்வு தொடர்பாக ஒரு ட்வீட்டை செய்துள்ளார். அதில், “பாவ் பஜ்ஜி, தோசை மற்றும் பிரியாணி ஆகிய மூன்று உணவுகளின் படங்களை பதிவிட்டு இந்த மூன்றில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டுமென்றால் எதை தேர்வு செய்வீர்கள்?

அதிலும் உணவை தேர்ந்தெடுப்பவர் சைவை உணவை விரும்புபவர் என்றால் பிரியாணி நிச்சயம் தேர்வாகாது. இது ஒரு உணவு தொடர்பான பதிவு” எனக் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவில் SAvsIND என்ற ஹேஸ்டேகை பதிவிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவிற்கு ரசிகர் ஒருவர் பாவ் பஜ்ஜி, நீர் தோசை மற்றும் பிரியாணி என்பது ரஹானே,ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி என்பதை குறிக்கிறது. 

வாசிம் ஜாஃபருடைய ட்வீட்டின் படி இந்திய அணியில் விஹாரி இருக்கமாட்டார் என்று கூறியுள்ளார். அவரின் இந்தப் பதிவை பலரும் பார்த்து இதுபோன்ற பல அர்த்தங்களை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க: 12 ஆண்டுகளுக்கு முன்... விராட் கோலியின் சத வேட்டை தொடங்கிய நாள் இன்று ! மெமரீஸ்..