சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் பல சிறந்த வீரர்களை உருவாகியிருந்தாலும் அதில் மறக்க முடியாத வீரர்கள் பலர் இருக்கின்றனர். அதில் மிக முக்கியமானவர் முதன்மையானவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன். கிரிக்கெட்டின் பெரும் சாதனையாளரான டான் பிராட்மேனின் சாதனை இன்று வரைக் கூட யாராலும் நெருங்க முடியவில்லை. 1927 ஆம் ஆண்டில் இவர் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய பிராட்மேன் ஏறக்குறைய 20 ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். சர் டொனால்ட் ஜார்ஜ் பிராட்மேன் என்று பெயர் கொண்ட கிரிக்கெட்டின் ஆதி காலத்து ஜாம்பவான் ஆன "டான் பிராட்மேன்" முதல் தர கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்த நாள் இன்று (டிசபார் 16). 1927 ல் அறிமுகமான அவர் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடினார். அவர் ஆடிய முதல் இன்னிங்சிலேயே 118 ரன்கள் குவித்து தனது ஆதிக்கத்தை தொடங்கினார். டெஸ்ட் போட்டிகளில் முதல் முதலில் ஒரே நாளில் 309 ரன்கள் அடித்த பெருமை பிராட்மேனையே சேரும். பிராட்மேன் காலக்கட்டத்தில் 20 ஆண்டுகளில் வெறும் 50 டெஸ்ட் போட்டிகளே விளையாடப்பட்டன. அவற்றுள் இங்கிலாந்து அணியுடன் மட்டும் 37 போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தம் 6,996 ரன்களைக் குவித்துள்ளார்.
அவரது பேட்டிங் சராசரி பிரமிக்கவைக்கும் வகையில் 99.96 ஆக உள்ளது. இந்தச் சாதனையை இப்போதும் கூட அதாவது பிராட்மேனின் பேட்டிங் சராசரியை யாராலும் இன்னும் நெருங்கக் கூட முடியவில்லை. டான் பிராட்மேன் 29 சதங்களும், 13 அரைசதங்களும் அடித்துள்ளார். அவர் தன்னுடைய ரன் சராசரியை 99.96 இல் இருந்து 100 ஆக மாற்றியிருக்கலாம். ஆனால் 1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான கடைசிப் போட்டி நடைபெற்றது. பிராட்மேன் தன்னுடைய ஓய்வை ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். ஓவல் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் நான்கு ரன்கள் மட்டும் அடித்தால் டெஸ்ட் கிரிக்கெட் சராசரியில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைக்க டான் பிராட்மனுக்கு வாய்ப்பு கிடைத்தது. பேட்டிங் செய்ய ஆடுகளத்துக்கு வந்த பிராட்மேனுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் எரிக் ஹோலிஸ் டான் பிராட்மனுக்கு பந்தை வீசினார். அதில் பிராட்மேன் ரன் அடிக்கவில்லை. ஆனால், இரண்டாவது பந்தில் டான் பிராட்மேன் அவுட்டானார். அத்துடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்றார் பிராட்மேன்.
234 முதல்தர போட்டிகளில் ஆடி 28,067 ரன்களை குவித்துள்ளார் பிராட்மேன். டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்களையும் முதல்தர போட்டிகளில் 117 சதங்களையும் அடித்துள்ளார். 1928 முதல் 1948 வரையிலான காலக்கட்டத்தில் 52 டெஸ்ட் போட்டிகளில் பிராட்மேன் ஆடியுள்ளார். அந்த காலக்கட்டத்தில் பிராட்மேனுக்கு பந்துவீசவே பவுலர்கள் பயந்து நடுங்கினர். அதை பவுலர்கள் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் உள்ளன. இந்திய அணி 1998-1999 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அந்தத் தொடரின் போது டான் பிராட்மன் தனது 90வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆஸி வீரர் ஷேன் வார்னே ஆகிய இருவரையும் டான் பிராட்மனின் பிறந்தநாளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். அப்போது பேசிய டான் பிராட்மேன் "சச்சினின் ஆட்டத்தை பார்க்கும்போது அதில் என்னையே பார்ப்பது போல உள்ளது" என்று புகழாராம் சூட்டினார். காலத்தால் வெல்ல முடியாத ஜாம்பவான் டான் பிராட்மேன் தன்னுடைய 93 ஆவது வயதில் 2001 ஆம் ஆண்டு காலமானார்.