உலகின் பாரம்பரியமிக்க டெஸ்ட் தொடர்களில் ஒன்று ஆஷஸ் டெஸ்ட் தொடர். ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் மோதும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் மிகுந்த வரவேற்பை பெற்றது.
2021-22ம் ஆண்டிற்கான ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலியா அணி வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதையடுத்து, இன்று இரு அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருந்தது. இந்தநிலையில், ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸுக்கு நேற்று இரவு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், அடிலெய்டில் இன்று தொடங்கும் இரண்டாவது வோடபோன் ஆஷஸ் ஆடவர் டெஸ்ட் போட்டியில் கம்மின்ஸ் விளையாட முடியாது என்றும், அவருக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய போட்டியில் மைக்கேல் நெசர் தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிறார். மேலும் டிராவிஸ் ஹெட் துணை கேப்டனாக இருப்பார்.
கம்மின்ஸ் இருந்த அதே உணவகத்தில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் நாதன் லியான் ஆகியோர் இருந்தபோதும் அவர்கள் தனியாக இருந்ததாலும், அவர்களிடம் கொரோனா அறிகுறி எதுவும் தென்படாத காரணத்தினாலும் அவர்கள் இருவரும் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்