பாபர் அசாம் நல்ல பேட்ஸ்மேன் தான் ஆனால் விராட் கோலியுடன் ஒப்பிடும் அளவிற்கு கிடையாது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். 


நீக்கப்பட்ட பாபர் அசாம்:


பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம். இவர் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். 2023 ஒருநாள் உலகக்கோப்பை, 2024 டி20 உலகக்கோப்பை என மிகமோசமான எதிர்வினையை சந்தித்த பாபர் அசாம், கேப்டன்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது மட்டுமில்லாமல், தன்னுடைய மோசமான பேட்டிங் ஃபார்மாலும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறார்.


இந்நிலையில், வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் மோசமாக செயல்பட்டதை தொடர்ந்து, பாபர் அசாம், நசீம் ஷா, ஷாகின் அப்ரிடி மற்றும் விக்கெட் கீப்பர் சர்ஃபராஸ் முதலிய வீரர்கள் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டனர். அவர்களுக்கு மாற்று வீரர்களாக அறிமுக வீரர்களான ஹசீபுல்லா, மெஹ்ரான் மும்தாஜ், கம்ரான் குலாம் மூன்று பேருடன், வேகப்பந்து வீச்சாளர் முகமது அலி மற்றும் ஆஃப் ஸ்பின்னர் சஜித் கான் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.


இதனிடையே ஃபகார் ஜமான் நேற்று முன்தினம் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில், 2019க்குப்பின் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 25க்கும் குறைவான சராசரியில் சுமாராக பேட்டிங் செய்தார் என்றும், இருப்பினும் அப்போது விராட் கோலியை இந்திய அணி பெஞ்சில் அமர வைக்கவில்லை எனவும் கூறியிருந்தார். ஆனால் பாகிஸ்தான் உருவாக்கிய சிறந்த பேட்ஸ்மேனான பாபர் அசாமை இப்படி நாம் ஒதுக்குவது சரியல்ல என்றும் தெரிவித்து இருந்தார்.


விராட் கோலியுடன் ஒப்பிடும் அளவிற்கு கிடையாது:


இந்த  நிலையில் பாபர் அசாம் நல்ல பேட்ஸ்மேன் தான் ஆனால் விராட் கோலியுடன் ஒப்பிடும் அளவிற்கு கிடையாது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,"கண்டிப்பாக வாய்ப்பு கொடுத்தால் க்ளாஸ் இருந்தால் பாபர் அசாம் ரன்கள் அடிப்பார். இந்த விவாதம் இத்தோடு நிறைவு பெற வேண்டும் என்று நான் நம்புகிறேன். முதலில் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே விராட் கோலி – பாபர் அசாமை ஒரே கருத்தில் இணைத்து பேசக்கூடாது.


இப்படி சொல்வதற்காக மன்னிக்கவும். பாபர் அசாமை நான் மதிப்பிடுகிறேன். அவர் நல்ல வீரர். ஆனால் விராட் கோலியின் நற்சான்றிதழ் வேறு ஒன்று. நிலப்பரப்புகளுக்கு அப்பால் காலங்களைக் கடந்து அழுத்தமான சூழ்நிலைகளில் விராட் கோலி செய்த விஷயங்களை உலகில் யாரும் நெருங்கவில்லை. எனக்குத் தெரிந்த வரை இந்த நேரத்தில் யாராவது அவரை நெருங்கினால் அது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் மட்டுமே" என்று கூறினார் அஸ்வின்.