கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய  2வது டி20 கிரிக்கெட் போட்டி ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமைந்திருக்கும். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு திருப்தியான, சவாலான சர்வதேச டி20 போட்டியாக இந்திய அணிக்கும் அமைந்தது. இன்று நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணிக்கு ரோவ்மென் பாவெல் மிகவும் அச்சுறுத்தலாகவே இருந்தார்.




இன்றைய போட்டியில் அவர் 36 பந்தில் 4 பவுண்டரி 5 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெயில், பொல்லார்ட், பூரண் ஆகியோருக்கு பிறகு மிகவும் பவர்புல் ஹிட்டராக உருவெடுத்துள்ளார் இந்த பாவெல். ஜமைக்காவில் 1993ம் ஆண்டு ஜூலை 23-ந் தேதி பிறந்த பாவெல் சிறுவயது முதலே கிரிக்கெட் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். பேட்டிங் மட்டுமின்றி, பந்துவீசுவதிலும் திறமையான பாவெலுக்கு மேற்கிந்திய தீவுகள் அணியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் கடந்த கடந்த 2016ம் ஆண்டு வாய்ப்பு கிடைத்தது. டி20 போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பாகிஸ்தானுக்கு எதிராக 2017ம் ஆண்டு அறிமுகம் ஆனார்.


ரோவ்மென் பாவெலுக்கு அணியில் நிலைத்த இடம் கிடைக்காவிட்டாலும், சமீபகாலமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்துள்ளார். அவர் இதுவரை 37 ஒருநாள் போட்டிகளில் ஆடி 786 ரன்களை குவித்துள்ளார். இவற்றில் 1 சதமும், 2 அரைசதமும் அடங்கும். 37 டி20 போட்டிகளில் ஆடி 526 ரன்களை எடுத்துள்ளார். இவற்றில் 1 சதமும், 2 அரைசதமும் அடங்கும்.




இங்கிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடிய டி20 தொடரில் ரோவ்மென் பாவல் ஆடிய ஆட்டம் அனைவரையும் அவரை யார்? என்று திரும்பி பார்க்கவைத்தது. மேற்கிந்திய தீவுகளில் அமைந்துள்ள பார்படாசில் உள்ள கென்சிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்தும், வெஸ்ட் இண்டீசும் மோதின. அந்த போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங் 10 ரன்களிலும், ஷாய் ஹோப் 4 ரன்களிலும் சொதப்பலான தொடக்கத்தை தர இன்று அசத்திய நிகோலஸ் பூரண் – ரோவ்மென் பாவெல் கூட்டணி ஜோடி சேர்ந்தது.


இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடிக்க, ரோவ்மென் பாவெல் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை கதறவிட்டார். 48வது ரன்னில் இறங்கிய பாவெல் 210 ரன்னில்தான் மைதானத்தை விட்டு வெளியேறினார். அதாவது 53 பந்துகளில் 107 ரன்களை குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த சதத்தில் அவர் அடித்தது வெறும் 4 பவுண்டரிகள் மட்டுமே. இந்த போட்டியில் அவர் 10 சிக்ஸர்களை பறக்கவிட்டு, தான் மிகப்பெரிய பவர்ஹிட்டர் என்று அனைவருக்கும் நிரூபித்தார்.




இவரது சிறப்பான பேட்டிங்கால் அந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போது முதல், அணிக்கு இக்கட்டான நேரத்தில் எல்லாம் ரோவ்மென் பாவெல் ஆபத்பாந்தவனாக அவதாரம் எடுத்து வருகிறார். இன்றைய போட்டியும் கூட அவர் ஒரு டேஞ்சர் பேட்ஸ்மேன் என்பதை அனைவருக்கும் உணர்த்தியுள்ளது. எதிர்காலத்தில் ஐ.பி.எல். மற்றும் சர்வதேச போட்டிகளில் ஒளிரும் நட்சத்திரமாக பாவெல் இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஐ.பி.எல். போட்டிகளில் டெல்லி அணிக்காக ரோவ்மென் பாவெல் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.