இந்திய அணியின் நட்சத்திர வீரரும், உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரருமானவர் விராட்கோலி. இந்திய அணிக்காக விராட்கோலி இதுவரை ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஆடி பல சாதனைகளையும், வெற்றிகளையும் குவித்துள்ளார். இவர் இலங்கையுடன் தனது 100வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆட உள்ளார். இந்திய அணிக்காக 100வது டெஸ்ட் போட்டியில் ஆடும் 12வது இந்திய கிரிக்கெட் வீரர் விராட்கோலி ஆவார்.


இதற்கு முன்பு இந்திய அணிக்காக 100க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளை ஆடிய வீரர்கள் விவரத்தை கீழே காணலாம்.


சச்சின் டெண்டுல்கர் :


இந்திய அணியின் லெஜண்ட் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகள் ஆடிய வீரர் என்ற பெருமையை தன்வசம் வைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 15 ஆயிரத்து 921 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 51 சதங்கள், 6 இரட்டை சதங்கள், 68 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 248 ரன்களை அடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 46 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 




ராகுல் டிராவிட்:


இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பு வகிக்கும் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். அவர் 13 ஆயிரத்து 288 ரன்களை குவித்துள்ளார். டெஸ்டில் 36 சதங்களையும், 5 இரட்டை சதங்களையும், 63 அரைசதங்களையும் விளாசியுள்ளார். தனிநபர் அதிகபட்சமாக டெஸ்டில் 270 ரன்களை எடுத்துள்ளார்.


வி.வி.எஸ். லட்சுமணன் :


இந்திய டெஸ்ட் அணியின் வளர்ச்சியின் அங்கமாக இருந்த வி.வி.எஸ். லட்சுமணன் இந்திய அணிக்காக 134 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். அவற்றில் 17 சதங்கள், 2 இரட்டை சதங்கள், 56 அரைசதங்களுடன் 8 ஆயிரத்து 781 ரன்களை குவித்துள்ளார்.


அனில் கும்ப்ளே :




இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமானவர் லெஜண்ட் சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே. அனில் கும்ப்ளே 132 டெஸ்ட் போட்டிகளில் ஆடி ஒரு சதம், 5வது அரைசதம் உள்பட 2 ஆயிரத்து 506 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்சமாக 110 ரன்களை எடுத்துள்ளனர். டெஸ்ட் போட்டியில் 619 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியாவிலே அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக உள்ளார். அதிகபட்சமாக ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.


கபில்தேவ் :


இந்தியாவிற்காக முதல் உலககோப்பையை வாங்கித்தந்த கபில்தேவ் 131 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 8 சதங்கள் 27 அரைசதங்களுடன் 5 ஆயிரத்து 248 ரன்களை எடுத்துள்ளார். தலைசிறந்த ஆல்ரவுண்டரான கபில்தேவ் 434 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், அதிகபட்சமாக ஒரே இன்னிங்சில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.


சுனில் கவாஸ்கர் :




இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கர் இதுவரை 125 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 10 ஆயிரத்து 122 ரன்களை குவித்துள்ளார். இந்திய அணிக்காக முதன்முதலில் 10 ஆயிரம் ரன்களை குவித்தவர் சுனில் கவாஸ்கர். அவர் 34 சதங்களையும், 4 இரட்டை சதங்களையும், 45 அரைசதங்களையும் குவித்துள்ளார்.


திலீப் வெங்கர்சகர் :


இந்திய அணியின் லெஜண்ட் கிரிக்கெட்டரான திலீப் வெங்கர்சகர் 116 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 6 ஆயிரத்து 868 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 17 சதங்களும், 35 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 166 ரன்களை எடுத்துள்ளார்.


சவுரவ் கங்குலி :




இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவரும், தற்போதைய பி.சி.சி.ஐ. தலைவருமான சவ்ரவ் கங்குலி 113 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 7 ஆயிரத்து 212 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 16 இரட்டை சதங்களும், 1 சதமும், 35 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 239 ரன்களும் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 32 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.


இஷாந்த் சர்மா :


இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வலம் வருபவர் இஷாந்த் சர்மா. அவர் 105 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 311 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதிகபட்சமாக ஒரே இன்னிங்சில் 7 விக்கெட்டுகளையும், ஒரே டெஸ்டில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். டெஸ்டில் ஒரு முறை அதிகபட்சமாக 88 ரன்களையும் குவித்துள்ளார்.


ஹர்பஜன்சிங் :


இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளராக வலம் வந்த ஹர்பஜன்சிங் 103 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். அவர் இதுவரை டெஸ்ட் போட்டியில் ஆடி 417 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதிகபட்சமாக ஒரே இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒரு டெஸ்டில் 15 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும், 103 டெஸ்ட் போட்டிகளில் 2 ஆயிரத்து 225 ரன்களை எடுத்துள்ளார். அவற்றில் 2 சதங்கள் அடங்கும். 9 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 115 ரன்களை எடுத்துள்ளார்.


வீரேந்திர சேவாக் :




வீரேந்திர சேவாக் 104 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 8 ஆயிரத்து 586 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 23 சதங்கள், 6 இரட்டை சதங்கள், 32 அரைசதங்கள் அடங்கும். 104 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 40 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.