லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணியின் தற்காலிக கேப்டன் ஷிகர் தவன், 12ஆயிரத்துக்கு அதிகமான ரன்களை விளாசிய 8ஆவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
இந்த வரிசையில் முதலிடத்தில் 21,999 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். அவரைத் தொடர்ந்து முன்னாள் வீரர்களான சவுரவ் கங்குலி (15,622 ரன்கள்), தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் (15,271 ரன்கள்), இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி (13,786 ரன்கள்) ஆகியோர் உள்ளனர்.
அவரைத் தொடர்ந்து எம்.எஸ்.தோனி 13,353 ரன்களையும், முகமது அசாருதீன் 12,931 ரன்களையும், யுவராஜ் சிங் 12,663 ரன்களையும் அடித்துள்ளனர். டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டி, 3 ஒருநாள் போட்டி என விளையாட திட்டமிடப்பட்டது.
இதில் டி20 தொடர் ஹர்திக் பாண்டியா தலைமையிலும், ஒருநாள் போட்டித் தொடர் ஷிகர் தவான் தலைமையிலும் நியூசிலாந்துக்கு எதிராக களம் இறங்கும் என பிசிசிஐ அறிவித்தது. ஏற்கனவே டி20 போட்டித் தொடர் முடிவடைந்த நிலையில் அதில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி ஆசத்தியது.
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி ஆக்லாண்ட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் குவித்தது.
இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 80 ரன்களும், ஷிகர் தவான் 72 ரன்களும், சுப்மன் கில் 50 ரன்களும் அடித்தனர். இறுதியாக வாஷிங்டன் சுந்தரும் 16 பந்தில் 37 ரன்கள் எடுத்து அதிரடிகாட்ட இந்திய அணி 300 ரன்களைக் கடக்க உதவியாக இருந்தது. 307 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது.
முன்னதாக, தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷிகர் தவன், 77 பந்துகளில் 13 பவுண்டரிகள் அடித்து 72 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.
இதனிடையே, நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர் டிம் சவுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகளைக் கடந்து சாதனை படைத்துள்ளார். இச்சாதனையை படைக்கும் 5-வது நியூசிலாந்து வீரர் இவர்.