கேரளாவைச் சேர்ந்த இளம் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அனைத்து வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்து 3 டி20, 3 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.


டி20 தொடரை இந்திய கிரிக்கெட் அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டம் மழையால் ரத்தானது. கடைசி ஆட்டம் டிஎல்எஸ் முறைப்படி டிரா ஆனது. இந்நிலையில், முதல் ஒரு நாள் ஆட்டம் இரு அணிகளுக்கு இடையே இன்று ஆக்லாந்தில் காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.


முதலில் விளையாடிய இந்திய 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளைாயடிய நியூசிலாந்து அணி 47.1 ஓவர்களில் 3  விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் விளையாடினார். அவர் 38 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார். 4 பவுண்டரிகளையும் அவர் விளாசினார். 


IND Vs NZ, 1st ODI: இந்தியாவின் வேகத்தை தகர்த்த லதாம்.. நங்கூரமாய் நின்ற வில்லியம்சன்.. நியூசிலாந்து அபார வெற்றி!


டி20 உலகக் கோப்பை தெடாரிலும் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அவரது யூடியூப் சேனலில் பேசி வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:
சஞ்சு சாம்சன் திறமையானவர். அவர் விளையாடவில்லை என்றால் கடினம். சஞ்சு சாம்சனுக்கு அனைத்து வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும். உண்மையில், அவர் தற்போது விதிவிலக்கான ஃபார்மில் இருப்பதாலும், சிறப்பாக விளையாடி வருவதாலும், அவர் விளையாடுவதைப் பார்க்க ஆவலுடன் இருப்பதாகவும் கூறினேன்.
அவர் (சாம்சன்) பார்க்க மிகவும் உற்சாகமான வீரர், மாறுபட்ட காம்பினேஷனுடன் சென்றதால் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.


 


செய்தியாளர்கள் சந்திப்பிலும் தோனி ஸ்டைலில் ஹர்திக் பதிலளித்தார். எனது அறை திறந்தே இருக்கும். எந்த வீரர் வேண்டுமானாலும் வந்து அவர்களுடைய பிரச்னைகளை என்னுடன் கலந்தாலோசனை செய்யலாம்.
ஹர்திக் இவ்வாறு பேசுவது நன்றாக இருக்கிறது. ஹர்திக் தல தோனிக்கு நெருக்கமானவர் என்று நம் அனைவருக்கும் தெரியும் என்றார் அஸ்வின்.


முன்னதாக, நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர் டிம் சவுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகளைக் கடந்து சாதனை படைத்துள்ளார். இச்சாதனையை படைக்கும் 5வது நியூசிலாந்து வீரர் இவர் ஆவார். 






32வயதான நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்  டிம் சவுதி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் அவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 202 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் சர்வதேச அளவில் 200 ஒருநாள் விக்கெட்டுகளைக் கடந்த ஐந்தாவது நியூசிலாந்து வீரர் இவர்.  இதற்கு முன்னர் நியூசிலாந்து அணி சார்பில், டேனியல் வெட்டோரி 297 விக்கெட்டுகளும், மைல்ஸ் 240 விக்கெட்டுகளும், கிரிஸ் ஹாரிஸ் 203 விக்கெட்டுகளும், கிரிஸ் கேரின்ஸ் 200 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர். அவர்கள் வரிசையில் டிம் சவுதி ஐந்தாவது வீரராக இணைந்துள்ளார். இவர் இதுவரை ஒருநாள் போட்டியில் 202 விக்கெட்டுகளும், டெஸ்ட் போட்டியில் 397 விக்கெட்டுகளும், டி20 போட்டியில் 134 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.