முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப், தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் தனிப்பட்ட விருப்பமான வீரர்களுக்கு மட்டும் ஆதரவளித்து குழுக்களாக பிரிந்து நிற்பதற்கு பதிலாக ஒற்றுமையாக ஒட்டுமொத்த அணிக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஒருநாள் போட்டிகளில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்க முடிவெடுத்த இந்திய அணி தேர்வுக்குழுவின் முடிவு பல தரப்பில் இருந்து விமர்சனங்களைத் பெற்றுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தாலும், கடைசி போட்டியை 200 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
உலகக்கோப்பை நெருங்கும் கட்டம்
இருப்பினும் சமூக ஊடகங்களில் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல ரசிகர்கள் இரு முக்கிய வீரர்களை ஆடவிடாமல் வைத்திருப்பது குறித்து தங்கள் கருத்துக்களையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினர். குறிப்பாக 50 ஓவர் உலகக் கோப்பை வருவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் இந்த முடிவு சரியானதா என்பது குறித்து பல கேள்விகள் எழுகின்றன. இது குறித்த விமர்சனங்கள் வந்ததை தொடர்ந்து, இந்திய அணியை விமர்சித்து தாக்குவதற்கு பதிலாக அவர்களுக்கு உங்கள் ஆதரவைக் காட்ட வேண்டிய நேரம் இது என்று கைஃப் கருத்து கூறியுள்ளார்.
கைஃப் பதிவு
டிவிட்டர் X இல் அவரது பதிவில், "கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள்: இந்திய அணியை குறித்து விமர்சித்து எழுத வேண்டாம். ஒற்றுமையைக் காட்டுங்கள், உங்கள் தனிப்பட்ட வீரர்களின் விருப்பத்தால் பிளவுபடாதீர்கள். ரோஹித்தும் டிராவிட்டும் பும்ரா போன்ற நட்சத்திரங்கள் இல்லாமல் பெரிய போட்டிகளில் விளையாடியுள்ளனர். உலகக் கோப்பை நம் ஊரில் நடக்க இருக்கிறது. இந்திய அணிக்கு உங்கள் ஆதரவு தேவை," என்று வர்ணனையாளராக மாறிய முன்னாள் வீரர் கைஃப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அஷ்வின் கருத்து
சமீபத்தில் இந்தியாவின் மூத்த ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினும் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு ஆதரவாக பேசி இருந்தார். அவர் விமர்சகர்கள் வெறுமனே தவறுகளை கண்டுபிடிப்பதாகக் கூறினார். சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றியை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று அவர் மேலும் கூறினார். “உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத அணியிடம் நாங்கள் தோற்றதால் சிலர் (மக்கள்) அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் ஒரே வேலை உலகக் கோப்பையை வெல்வது என்று பலர் நினைக்கிறார்கள். ஐபிஎல் தொடர் காரணமாக, உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். உலகக் கோப்பையை வெல்வது எளிதல்ல... ஒரு குறிப்பிட்ட வீரரை விளையாடினாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட வீரரை வீழ்த்தினாலோ வெற்றி பெற முடியாது. " என்று அஸ்வின் கூறினார்.