பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் ஹேர் ஸ்டைலை புகழ்ந்து பேசும் வீடியோ சமூகவலைத்தளங்கில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பர்வேஸ் முஷாரப் பாகிஸ்தானின் அதிபராக இருந்த காலத்தில், அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக, 2007-ஆம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி அவசர நிலை பிரகடனம் செய்தார். மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் அவர் சிறையில் அடைத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து அவர் மீது 2013-ஆம் ஆண்டு டிசம்பரில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கை எதிர்த்து முஷாரப் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக எனக் கூறி, பாகிஸ்தானிலிருந்து முஷாரப் வெளியேறி துபாய் சென்றுவிட்டார்.


பின்னர் அங்கேயே அவர் தங்கிவிட்டார். முன்னதாக தேசத் துரோக வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முஷாரப்புக்கு சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனையை அறிவித்தது. அதனை எதிர்த்து தொடுக்கப்பட்ட மறு சீராய்வு மனுவை விசாரித்த லாகூர் உயர் நீதிமன்றம், பர்வேஸ் முஷாரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கை எதிர்த்து முஷாரப் மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் சூழலில் முஷாரப் உடல் நிலை மோசமாகி தற்போது அவர் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார். இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் ஹேர் ஸ்டைலை பர்வேஸ் முஷாரப் புகழும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. 


 



இந்திய அணி கடந்த 2005-06 ஆண்டில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. லாகூரில் நடந்த போட்டியில் தோனி குவித்த 72 ரன்களால் இந்திய அணி வெற்றிபெற்றது. அந்த போட்டியை நேரில் கண்டுகளித்த அன்றைய அதிபர் முஷரப் பேசுகையில், சிறப்பாக விளையாடிய இந்திய அணியை பாராட்ட விரும்புகிறேன். குறிப்பாக இந்த வெற்றிக்கு காரணமான தோனியை பாராட்ட விரும்புகிறேன். நான் தோனிக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், இந்த சிகை அலங்காரத்தில் நீங்கள் அழகாக உள்ளீர்கள். அதை மாற்ற வேண்டாம் என தெரிவித்து இருந்தார். தற்போது பர்வேஸ் முஷாரப் கவலைக்கிடமாக உள்ள நிலையில் தோனியின் ஹேர் ஸ்டைலை புகழ்ந்து பேசும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. 


இந்த நிகழ்ச்சியில் மேலும் பேசிய முஷாராப், சுவாரசியாமாக நடந்த இந்த கிரிக்கெட் போட்டியில் மிகவும் சிறப்பாக பாகிஸ்தான் அணி விளையாடி ரன்களை சேர்த்தது. அதே நேரத்தில் இந்திய அணியும் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றுள்ளது. இந்திய அணியை மீண்டும் வாழ்த்தும்  அதே நேரத்தில் பாகிஸ்தான் அணியையும் வாழ்த்த விரும்புகிறேன். உங்களை நீங்கள் குறைத்து மதிப்பிட்டுக்கொள்ள வேண்டாம்; நீங்கள் சிறப்பாகவே விளையாடினீர்கள். இனி வரும்  காலங்களிலும்  யார் வெற்றி பெற்றாலும் அந்த சுவாரசியமான கிரிக்கெட் நிகழ்வை ரசிப்போம் என்றார்.